தேர்தல் பிரசாரம் மும்முரம் சித்தராமையா தலைமையிலான காங். அரசு மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு


தேர்தல் பிரசாரம் மும்முரம் சித்தராமையா தலைமையிலான காங். அரசு மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு
x
தினத்தந்தி 2 May 2018 6:57 AM IST (Updated: 2 May 2018 6:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. பிரசாரத்தின்போது “சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது” என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் பா.ஜனதா சார்பில் 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் சார்பில் 222 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் 219 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். சுயேச்சை உள்பட மொத்தம் 2,655 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் பிரசாரத்தை தொடங்கி இதுவரை 8 முறை கர்நாடகத்திற்கு வந்து, பெரும்பாலான மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து உள்ளார்.

ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் கருப்பு பணம், பண மதிப்பிழப்பால் மக்கள் பட்ட வேதனைகள், வேலைவாய்ப்பை உருவாக்காதது, வங்கி கடன் மோசடி, தலித்துகள் மீதான தாக்குதல் போன்ற விஷயங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

அதேபோல் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வும் கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே தனது தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார். அவர் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, கர்நாடக காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக குறை கூறி பேசினார்.

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பெங்களூரு, மைசூரு, தாவணகெரே ஆகிய 3 நகரங்களில் நடந்த பா.ஜனதா கூட்டங்களில் பேசினார்.

இந்த நிலையில் 2 மாத இடைவெளிக்கு பிறகு பிரதமர் மோடி கர்நாடகத்தில் நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். நேற்று காலை மைசூருவுக்கு தனி விமானம் மூலம் வந்த மோடி, ஹெலிகாப்டரில் கர்நாடகம்-தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள சாம்ராஜ்நகருக்கு சென்றார்.

அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசுகையில், ராகுல்காந்தியை கடுமையாக தாக்கியதோடு, அவருக்கு சவாலும் விடுத்தார்.

மோடி பேசுகையில்; “நாடாளுமன்றத்தில் 15 நிமிடங்கள் தன்னை பேச அனுமதித்தால், எனது அரசின் ஊழல்களை வெளிப்படுத்துவதாகவும், நான் சபையில் உட்கார முடியாமல் வெளியேறிவிடுவேன் என்றும் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சார், உங்கள் முன் என்னால் உட்கார முடியாது. நீங்கள் பிரபலமானவர். நான் சாமானியன். உங்கள் முன் அமர எனக்கு தகுதி இல்லை. சித்தராமையா அரசின் சாதனைகள் பற்றி துண்டு சீட்டை பார்க்காமல் 15 நிமிடங்கள் உங்களால் (ராகுல் காந்தி) பேச முடியுமா? கர்நாடகத்தின் புகழ் பெற்ற என்ஜினீயர் விஸ்வேசுவரய்யாவின் பெயரை 5 முறை உச்சரியுங்கள் பார்க்கலாம்” என்றார்.

அதுபோல் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசையும் கடுமையாக தாக்கி பேசினார். சித்தராமையா ஆட்சியில் கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், ஊழல் பெருகிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

சித்தராமையா 2 தொகுதியிலும், அவரது மகன் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். இதேபோல் பல மந்திரிகளும் அவர்களது மகன்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதை குறை கூறிய மோடி, காங்கிரஸ் குடும்ப அரசியலை நடத்துவதாகவும், அதனால் காங்கிரசுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து உடுப்பிக்கு சென்று பேசிய மோடி, ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவை புகழ்ந்து பேசினார். அவர் நாட்டின் உயர்ந்த தலைவர்களில் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார். அத்தகைய தலைவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவமரியாதையாக பேசுவதாகவும் குறை கூறினார்.

தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைக்கும் என்று ஏற்கனவே பேசப்பட்டு வரும் கருத்தை உறுதி செய்வது போல் மோடியின் இந்த பேச்சு அமைந்து இருந்தது.

அதைத்தொடர்ந்து பெலகாவி சென்று அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்தாகவும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க காங்கிரஸ் விரும்பவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

பெலகாவி கூட்டம் முடிந்ததும் டெல்லி புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடி மீண்டும் நாளை (வியாழக்கிழமை) கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். தேர்தலுக்கு முன் மாநிலம் முழுவதும் 15 தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேச அவர் திட்டமிட்டு உள்ளார்.

Next Story