நகரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்
விழுப்புரம் நகரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய 50 மைக்ரானுக்கு குறைவான அளவில் உள்ள பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தக்கூடாது என்று ஏற்கனவே நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் இது சம்பந்தமாக நகரில் உள்ள அனைத்து கடைகளின் வியாபாரிகளுக்கும் நோட்டீசு வழங்கப்பட்டது. இருப்பினும் அதை மீறி நகரில் சில கடைகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதையடுத்து நகர்நல அலுவலர் ராஜா தலைமையிலான அதிகாரிகள், பணியாளர்கள் விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை செய்யும் 20-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகளில் ஆய்வு செய்ததில், தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவான அளவில் இருக்கக்கூடிய பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், தெர்மாகூழினால் செய்யப்பட்ட தட்டுகள் ஆகியவற்றை விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்து 2 மினி லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் விரைவில் அழிக்கப்படும். மேலும் இதுபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், பாலித்தீன் பைகளை வியாபாரிகள் யாரும் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்வோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story