வருமான வரி அதிகாரிபோல் நடித்து ரூ.2.20 லட்சம் பறிப்பு

வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் ரூ.2.20 லட்சத்தை பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மண்கூடல் கிராமம் எல்லாயூர் பகுதியை சேர்ந்தவர் ராமு கவுண்டர். தேங்காய் வியாபாரி. செம்மண்கூடல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். நேற்று மதியம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு உதவியாளர் ஒருவருடன் ராமு கவுண்டர் வந்தார். வங்கியில் அவரது கணக்கில் இருந்து ரூ.4.20 லட்சத்தை எடுத்தார்.
அதில் ரூ.2.20 லட்சத்தை அவர் வைத்து கொண்டு, மீதி ரூ.2 லட்சத்தை அவரது உதவியாளரிடம் கொடுத்தார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தேங்காய் குடோனை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் டிப்-டாப் ஆசாமி ஒருவர் வந்தார். அவர் திடீரென ராமு கவுண்டர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்.
பின்னர் அவர் தான் ஒரு வருமானவரி அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் ராமு கவுண்டரிடம், நீங்கள் வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றி வருகிறீர்கள், உங்களிடம் உள்ள பணத்தை எடுங்கள், என்று கூறினார். அப்போது ராமு கவுண்டர் தான் வைத்திருந்த ரூ.2.20 லட்சத்தை கொடுத்தார். இதை வாங்கிக்கொண்ட அந்த மர்ம நபர், ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து முறையான ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி ராமு கவுண்டரிடம் கூறி விட்டு சென்றார்.
பின்னர் ராமு கவுண்டர் தனது உதவியாளருடன் ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அதற்கு மூர்த்தி, அப்படி யாரும் இங்கு வரவில்லை, என்றார். இதையடுத்து ராமு கவுண்டர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். வருமான வரி அதிகாரி போல் நடித்து ராமு கவுண்டரிடம் மர்ம நபர் ரூ.2.20 லட்சத்தை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story