வேட்புமனு பரிசீலனைக்கு அதிகாரி வராததை கண்டித்து முற்றுகை
சின்னமனூர் அருகே வேட்புமனு பரிசீலனை செய்ய தேர்தல் நடத்தும் அதிகாரி வராததை கண்டித்து தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னமனூர்,
சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் போட்டியிட மொத்தம் 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த 12 பேரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 12 பேரும் அடங்குவர். இந்த சங்கத்தில் வேட்பு மனு பரிசீலனை நேற்று நடைபெறுவதாக தேர்தல் அலுவலர் சுருளிவேல் அறிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் 10 மணிக்கு தி.மு.க. கிளைச் செயலாளர் மணி தலைமையில் தி.மு.க.வினரும், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி தலைமையில் அ.ம.மு.க.வினரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு ஆனால் அலுவலகம் திறக்கப்படவில்லை.
இதனால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். உடனே தி.மு.க., அ.ம.மு.க.வினர் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு வேட்பு மனு பரிசீலனைக்கு அதிகாரி வராததை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராஜ்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
இதே போல் சின்னமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் அ.ம.மு.க.வினர் 12 பேர் வேட்பு மனுவும் அடங்கும். வேட்பு மனு பரிசீலனை நேர்மையாக நடைபெறும் என்று தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணி கூறியதாக அ.ம.மு.க.வினர் தெரிவித்தனர்.
ஆனால் நேற்று வேட்பு மனு பரிசீலனை குறித்து அலுவலரிடம் அ.ம.மு.க.வினர் சின்னமனூர் நகர செயலாளர் சுரேஷ் தலைமையில் வந்து கேட்டனர். அவர் முறையாக பதில் கூறவில்லை. இதனால் அ.ம.மு.க.வினர் ஆத்திரமடைந்தனர். அப்போது சங்க அலுவலகம் முன்பு கூடியிருந்த அ.தி.மு.க.வினருக்கும், அ.ம.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு, முள்ளாக மாறியது. தகவலறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேட்புமனுக்களை பரிசீலனை செய்து, வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தேர்தல் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன் மாலை 3 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடாமல் புறப்பட்டு சென்றார். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேர்தல் அலுவலர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், எந்த அறிவிப்பு செய்யாமல் சென்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்க மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அ.ம.மு.க.வினர் புகார் மனு அனுப்பியுள்ளனர்.
கம்பத்தை அடுத்த காமயகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது அ.ம.மு.க., தே.மு.தி.க., சமத்துவ மக்கள் கட்சிகளை சேர்ந்தவர்களை சங்கத்துக்குள் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதை கண்டித்து கம்பம்-காமயகவுண்டன்பட்டி சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ராயப்பன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்தனர். அவர்களை அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
உத்தமபாளையத்தில் உள்ள கூட்டுறவு நிலவள வங்கியில் வேட்புமனு பரிசீலனையின் போது அ.ம.மு.க.வின் வேட்பாளர்களை உள்ளே அனுமதிக்காததை கண்டித்து வங்கி முன்பு உத்தமபாளையம் ஒன்றிய கழக செயலாளர் அப்துல்காதர்ஜெய்லானி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலவள வங்கி முன்னாள் தலைவர் அயூப்கான், பேரூர் செயலாளர் கல்யாணசுந்தர், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் துப்பாக்கி ரகுமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story