செல்லியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


செல்லியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 3 May 2018 4:00 AM IST (Updated: 3 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

செல்லியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 23-ந்தேதி அய்யனார் கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் செல்லியம்மன், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை, மாலை இரு வேளைகளிலும் செல்லியம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் மயில் வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவில் மூன்றாம் நாள் படைத்தேர் விழாவும், ஏழாம் நாள் மாதிரி தேரோட்ட விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

அலங்கார பணிகள்

அதனை தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் தேரை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கூலி ஆட்கள் இல்லாமல் சிறுகடம்பூர் கிராமமக்களே இணைந்து தேரின் அலங்கார பணிகளை மேற்கொண்டு தேரினை இழுத்து செல்வது இந்த ஊர் தேர் திருவிழாவின் தனிச் சிறப்பு ஆகும். அதன்படி தேரை அலங்காரம் செய்யும் பணிகள் முடிந்தது. இதை யடுத்து விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி தங்களது நிலங்களில் விளைந்த முந் திரி, மா, பலா, ஆகியவற்றை கையிறுகளில் கோர்த்து தேரில் கட்டி தொங்க விட்டனர்.

தேரோட்டம்

அதை தொடர்ந்து நேற்று காலை செல்லியம்மன், மாரியம்மனுக்கு மஞ்சள் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து செல்லியம்மன், மாரியம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு செல்லியம்மன், மாரியம்மன் திருத் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து நாதஸ்வர இசை, மேள தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதி வழியாக பக்தர்கள் படை சூழ தேர் அசைந்து ஆடி வந்தது. பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதையடுத்து ஆண்கள் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சனமும், பெண்கள் நடை கும்பிடு போட்டும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் செல்லியம்மன், மாரியம்மன் ஒரே தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுவது இந்த கோவிலில் மட்டும் தான் என்பது சிறப்புக்குறியது ஆகும் இன்று மஞ்சள் விளையாட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தேரோட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரும்புலிக்குறிச்சி போலீசார் செய் திருந்தனர். 

Next Story