மனுக்களை தள்ளுபடி செய்ததற்காக அதிகாரிகளை கண்டித்த கலெக்டர்
பொதுமக்கள் வழங்கிய மனுக்களை தள்ளுபடி செய்ததற்காக, ஜமாபந்தியின் போது தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினரை கலெக்டர் டி.ஜி.வினய் கண்டித்தார்.
திண்டுக்கல்
நிலக்கோட்டை தாலுகாவில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் மனு கொடுப்பதற்காக நரியூத்து, கோட்டூர், பச்சைமலையான்கோட்டை, நிலக்கோட்டை, கோடாங்கிநாயக்கன்பட்டி, நக்கலூத்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 400 பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். மதியம் 1 மணிக்கு வந்த கலெக்டர், ஏற்கனவே அந்த பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிலப்பட்டா குறித்த பட்டியலை கேட்டார்.
அப்போது, 300 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்திருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர், அதற்கான காரணத்தை கேட்டபோது, வாரிசுச்சான்று உள்ளிட்ட 3 வகையான ஆவணங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறினர். இதுபோன்ற காரணத்தினால் மனுக்களை தள்ளுபடி செய்யக்கூடாது, மனு கொடுக்கும்போதே அந்த சான்றிதழ்களை வாங்கி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினரை கலெக்டர் கண்டித்தார்.
மேலும் மனுக்களை ஆய்வு செய்து பட்டா வழங்க நேற்று நடந்த ஜமாபந்தியில் தனிக் குழுவை அமைக்க உத்தரவிட்டார். இருப்பினும் சில ஆவணங்கள் இல்லை என்று கூறி கிராம மக்களிடம் மனுக்களை பெறவில்லை. இதனால் பாதிக் கப்பட்ட மக்களிடம் மீண்டும் மனுக்களை பெற்று பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் அந்ததந்த தாலுகா அலுவலர்கள் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தகுதியுடைய அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வருகிற 11-ந்தேதி வரை அந்தந்த மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்து பயன்பெறலாம், என்றார்.
இதேபோல திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் ஆர்.டி.ஓ. ஜீவா, கிழக்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கற்பகம் ஆகியோர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினர்.
கொடைக்கானல் தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. மோகன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் தாசில்தார் பாஸ்யம், தலைமையிடத்து துணை தாசில்தார் பாஸ்கர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் வில்பட்டி, பூம்பாறை, கூக்கால், மன்னவனூர் உள்பட மேல்மலை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.
பழனி தாலுகா அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் ஜமாபந்தி நடந்தது. தனி தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைபட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மரிச்சிலம்பு, கீரனூர், தொப்பம்பட்டி, வேலம்பட்டி, புளியம்பட்டி, வில்வாதம்பட்டி, மொல்லம்பட்டி, மேட்டுப்பட்டி, வாகரை ஆகிய கிராம மக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, நிலக்கோட்டை தாலுகாவில் ‘கிராம ஸ்வராஜ் அபியான்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற, விவசாயிகளுக்கான வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை குறித்த கருத்தரங்கில் கலெக்டர் பேசும்போது, சொட்டுநீர் பாசனத்துக்கு மத்திய அரசு சார்பில் கடந்த ஆண்டு, தமிழகத்துக்கு ரூ.400 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு அது ரூ.800 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1,000 எக்டேர் மானாவாரி நிலங்களை மேம்படுத்தும் விதமாக நிலக்கோட்டை தாலுகாவில் 4 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, என்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது, 2 விவசாய குழுக்களுக்கு ரூ.11 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் வேளாண் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். இதில் வேளாண் இணை இயக்குனர் சேகர், செயற்பொறியாளர் ராமமூர்த்தி, கால்நடை இணை இயக்குனர் சாமுவேல் ஜெபராஜ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story