கால்நடைத்துறை அதிகாரி மீது பாலியல் புகார்: பெண் டாக்டர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை


கால்நடைத்துறை அதிகாரி மீது பாலியல் புகார்: பெண் டாக்டர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை
x
தினத்தந்தி 3 May 2018 5:00 AM IST (Updated: 3 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

கால்நடைத்துறை இயக்குனர் பத்மநாபன் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் கொடுத்த பெண் டாக்டர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தலித் இயக்கங்களின் போராட்டக்குழு வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாநில அனைத்து தலித் இயக்கங்களின் போராட்டக்குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நீல.கங்காதரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கால்நடைத்துறையை சேர்ந்த பெண் டாக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கால்நடைத்துறை இயக்குனராக இருந்த பத்மநாபனை புதுச்சேரி அரசு காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது சமூக நீதிக்கு எதிரான செயலாகும். இது ஒட்டுமொத்த தலித் சமூகத்தையும் இழிவுபடுத்தும் செயலாகும்.

பெண் டாக்டரின் குடும்பத்தோடு பத்மநாபன் நீண்ட காலமாக குடும்ப நண்பராக பழகி வந்தவர். உண்மையாகவே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் அவர் டாக்டர் பத்மநாபன் குடும்பத்தோடு நட்புறவு கொண்டிருப்பாரா?

இதுமட்டுமின்றி பெண் டாக்டரின் புகார் குறித்து விசாரிக்க காவல்துறை, கால்நடை துறை செயலாளர், தலைமை செயலாளர் இப்படி யாருக்காவது அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டு இருக்க வேண்டும். இதை செய்யாமல் மாவட்ட புகார்கள் குழு சேர்மனுக்கு அனுப்பியது ஏன்?

10 பெண்களுக்கு குறைவாக பணிபுரியும் இடத்தில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கத்தான் மாவட்ட புகார்கள் குழுவுக்கு அதிகாரம். ஆனால் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் கால்நடைத்துறையில் இதுபோன்ற விசாரணைகள் நடத்த மாவட்ட புகார்கள் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதுமட்டுமில்லாமல் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானவரோ அவரது உறவினர்களோ குற்றம் நடந்த 3 மாதங்களுக்குள் புகார் கொடுக்கவேண்டும்.

பெண் டாக்டர் தான் காரைக்காலுக்கு இடமாறுதல் செய்யப்பட்டதை தடுக்க எடுத்த எல்லா அரசியல் முயற்சிகளும் பலனளிக்காத காரணத்தால்தான் டாக்டர் பத்மநாபன் மீது இந்த பொய்புகாரை அளித்துள்ளார். அவரோடு சேர்ந்து மேலும் சிலரும் இடமாறுதலை தடுக்கவும், விதிகளை மீறி பணிநிரந்தரம் பெறவும் இத்தகைய பொய் புகார்களை கூறுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் மாவட்ட புகார்கள் குழு சேர்மன் டாக்டர் வித்யா ராம்குமார் புதுச்சேரி கால்நடை கல்லூரி டீன் டாக்டர் ராம்குமாரின் துணைவி ஆவார். இந்த விவகாரத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாக டாக்டர் பத்மநாபன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் பத்மநாபன் மீது பொய் புகார் கொடுத்த பெண் டாக்டர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். பத்மநாபனை காத்திருப்போர் பட்டியலில் இருந்து விடுவித்து அவரை மீண்டும் கால்நடைத்துறை இயக்குனராக பணி ஏற்க உத்தரவிட வேண்டும். கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தலித் விரோத போக்கோடு செயல்படுகிறார்.

விஜயவேணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இப்போது தலித் சமுதாயத்தை சேர்ந்த அதிகாரி பத்மநாபன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story