சட்டசபையை முற்றுகையிட முயற்சி: சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் 117 பேர் கைது


சட்டசபையை முற்றுகையிட முயற்சி: சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் 117 பேர் கைது
x
தினத்தந்தி 3 May 2018 4:30 AM IST (Updated: 3 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபையை முற்றுகையிட முயன்ற சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் 117 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே புதிதாக தனியார் சார்பில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு புதுவை சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தனியார் படகு குழாமுக்கு அரசு அனுமதி அளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 25-ந்தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு குழாமுக்கு வருகின்றனர். ஆனால் கடந்த 8 நாட்களாக படகுகள் இயக்கப்படாமல் படகு குழாம் பூட்டிக் கிடப்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதனால் நாளொன்றுக்கு படகு குழாமில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

ஊழியர்களின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் படகு குழாம் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

நேற்றும் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதுவை கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் முன்பு கூடிய ஊழியர்கள் அங்கிருந்து புதுவை சட்டசபையை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். இதில் பல்வேறு சமூக இயக்கங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் ஆம்பூர் சாலை அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால் அதை மீறி செல்ல ஊழியர்கள் முயன்றனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் 117 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story