டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
பெண்ணாடம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்
பெண்ணாடம் அருகே உள்ள மாளிகைகோட்டம் கிராமத்தின் எல்லையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும். அதுவரை டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று கூறினார். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை பூட்டப்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மாளிகைகோட்டம் கிராமத்தில் மற்றொரு இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து அங்கு டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இது பற்றி அறிந்த கிராம மக்கள் தங்களது கிராமத்திற்குள் டாஸ்மாக் கடையே இருக்கக்கூடாது என்று கூறி சாலை மறியல் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து மதியம் 12.30 மணிக்கு மாளிகைகோட்டம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள், டாஸ்மாக் கடையை மாளிகைகோட்டம் கிராமத்திற்குள் திறக்கக்கூடாது என்ற கோஷங்களை எழுப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இப்பிரச்சினை சம்பந்தமாக தாசில்தார், கோட்டாட்சியரிடம் பேசி முடிவு எடுத்துக் கொள்ளுமாறு போலீசார் அறிவுரை கூறினர். இதை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். டாஸ் மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story