அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பேனர்கள் அகற்றப்படும் கலெக்டர் எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பேனர்கள் அகற்றப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி
தேனி மாவட்டத்தில் விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, வர்த்தக சங்கத்தினர், அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் விளம்பர பலகைகள் வைக்க மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற ஆணைகளின்படி பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் போன்றவற்றை முறையான அனுமதியின்றி வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, அச்சக உரிமையாளர்கள் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பேனர்கள் அச்சிடும்போது அதில் மாவட்ட கலெக்டரின் அனுமதி கடித எண், நாள் மற்றும் அனுமதி காலம் போன்றவற்றை குறிப்பிடவேண்டும். மாவட்ட கலெக்டரின் முறையான அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள் அச்சிடக்கோரி வரும் நபர்களது கோரிக்கைகளை அச்சக உரிமையாளர்கள் ஏற்கக்கூடாது.
முறையான அனுமதி ஆணைகளை சரிபார்த்த பின்னரே விளம்பர பேனர்களை அச்சிட வேண்டும். பேனர்கள் வைக்கப்படவுள்ள இடமானது வெவ்வேறு உரிமையாளர்களின் வசம் உள்ள இடம் எனில் (அரசு, தனியார்) ஒவ்வொரு உரிமையாளரிடமிருந்தும் தனித்தனியாக தடையின்மைச் சான்றும், பாதுகாப்பான வாகனப் போக்குவரத்துக்கோ, மக்கள் போக்குவரத்துக்கோ இடையூறாக இல்லை என தொடர்புடைய காவல் ஆய்வாளரிடம் பெறப்பட்ட தடையின்மைச் சான்றும் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் அமைப்பதற்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கருவூல அலுவலகத்தில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட அனுமதி கட்டணத்துடன் கூடுதலாக வைப்புத்தொகையாக ஒரு விளம்பர பேனருக்கு ரூ.50 செலுத்த வேண்டும். விளம்பர பேனர்கள் வைக்கும் போது தெரு அல்லது பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டால், அந்த தொகை திருப்பி வழங்கப்படமாட்டாது. மேலும் சேதமான பகுதிக்கு மதிப்பு தொகை வைப்புத்தொகையை விட அதிகமாக உள்ள பட்சத்தில் கூடுதல் செலவு தொகை விளம்பர அனுமதி பெற்றவரிடம் வசூலிக்கப்படும். சேதம் எதுவும் இல்லாத பட்சத்தில் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பினால் அந்த தொகை திரும்ப வழங்கப்படும்.
கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், சாலை சந்திப்புகள், சாலை சந்திப்பிலிருந்து இருபுறமும் 100 மீட்டர் தூரம் வரை, அறிவிக்கப்பட்ட நினைவு சின்னங்கள், சிலைகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் முன்பாக விளம்பர பேனர்கள் அமைக்க கூடாது.
அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பேனர்கள் உரிய அதிகாரிகளால் அகற்றப்படும். மேலும் அகற்றுவதற்கான செலவு தொகை விளம்பரம் வைத்தவரிடம் வசூலிக்கப்படும். அனுமதி பெற்றவர் விதிகளை மீறினாலோ அல்லது விதிகளின்படி நடக்கவில்லை என்றாலோ வைக்கப்பட்ட விளம்பரத்தின் வாசகங்கள் ஆட்சேபகரமாக இருந்தால் உடனடியாக அந்த விளம்பர பேனர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வருவாய் அலுவலர் கந்தசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் மற்றும் அரசியல் கட்சி பிரநிதிகள், அச்சக உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story