சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம் ஏரிகள் விரைவாக வறண்டு விடும் நிலை


சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம் ஏரிகள் விரைவாக வறண்டு விடும் நிலை
x
தினத்தந்தி 4 May 2018 5:00 AM IST (Updated: 4 May 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம் ஏரிகள் விரைவாக வறண்டு விடும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் மூலம் சமாளிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

சென்னை,

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மற்றும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அரசுகள் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்படும் தண்ணீர் இந்த 4 ஏரிகளில் கையாளப்படுகிறது.

ஆந்திர மாநில அரசு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். இதனை ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு பருவத்திற்கும் 2 அல்லது 3 டி.எம்.சி. தண்ணீர் வீதம் திறக்கப்பட வேண்டும். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள பூண்டி நீர் தேக்கத்துக்கு வருகிறது.

அங்கிருந்து சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக புழல், மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் மூலமாக குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியம் சராசரியாக ஒரு நாளைக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை மாநகர பகுதிகளுக்கு வினியோகம் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் இந்த ஏரிகள் வரலாறு காணாத வகையில் வறண்டு போனது. இதனால் கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது.

ஆனால் நடப்பாண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையால் ஓரளவு ஏரிகளில் தண்ணீர் நிரம்பியது. நேற்றைய நிலவரப்படி 4 ஏரிகளிலும் சேர்த்து 3.374 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. இதில் பூண்டி ஏரியில் 329 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 1.758 டி.எம்.சி.யும், சோழவரத்தில் 70 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 1.217 டி.எம்.சி. தண்ணீர் வீதம் இருப்பு உள்ளது.

புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் மட்டும் 1 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் அரை டி.எம்.சி.க்கு கீழேயும், சோழவரத்தில் வெறும் 70 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

இந்த நிலையில் பூண்டி ஏரியில் இருந்து சராசரியாக தினசரி 454 கன அடிவீதமும், சோழவரத்தில் இருந்து 2 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 120 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 111 கன அடி வீதமும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

4 ஏரிகளிலும் கடந்த மாதம் 19-ந் தேதி 3.943 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால் 11 நாட்களுக்கு பிறகு அதாவது கடந்த மாதம் 30-ந் தேதி 3.481 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது. அவ்வாறு பார்க்கும் போது 11 நாளைக்கு 462 மில்லியன் கன அடி வீதம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய நிலவரப்படி 3.374 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. 11 நாளைக்கு 462 மில்லியன் கன அடி வீதம் தண்ணீர் எடுப்பதன் மூலம் தற்போதைக்கு இருக்கும் தண்ணீர் 2 மாத தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் நிலை உள்ளது.

இது ஒரு புறம் இருக்க, பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகள் விரைவில் வறண்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீரை எடுத்து நிலமையை சமாளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 4 ஏரிகளிலும் 729 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும் இருந்தது.

இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்குகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்க கூடும். ஏரியில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதுதவிர நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து தலா 100 மில்லியன் கன அடி மற்றும் 200 மில்லியன் கன அடி வீதம் தண்ணீர் பெறப்படுகிறது.

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குடிநீருக்கு ஏரிகள் கைகொடுக்கவில்லை என்றால், சென்னையை அடுத்துள்ள சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பம்பு செட்டுகள், போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் பெறுவது குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது கல்குவாரிகளில் 1.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

சென்னை மாநகரப்பகுதிகளில் கடந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு இருந்ததால் 430 மில்லியன் லிட்டர் வீதம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

அதற்கு பிறகு ஏரிகளில் போதிய தண்ணீர் இருந்ததால் 650 மில்லியன் லிட்டர் வீதம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஏரிகளில் தண்ணீர் வெகுவிரைவாக குறைந்து வருவதால் வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதிலும் அளவு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story