ஊத்துக்கோட்டை அருகே சிற்றபாக்கம் தடுப்பணை வறண்டது குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


ஊத்துக்கோட்டை அருகே சிற்றபாக்கம் தடுப்பணை வறண்டது குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றபாக்கம் தடுப்பணை வறண்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடும் தண்ணீர் சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்க கடலில் கலக்கிறது. இப்படி தண்ணீர் வீனாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன் பெறும் விதத்தில் தமிழக அரசு ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றபாக்கம் பகுதியில் 1983-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியது.

10 அடி உயரம் கொண்ட இந்த தடுப்பணையில் சேமித்து வைக்கும் தண்ணீரை தேவைப்படும் போது கிருஷ்ணா நதி கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு திறந்து விடுவது வழக்கம். வெள்ளம் ஏற்பட்டால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு தடுப்பணை முழுவதுமாக நிரம்பியதால் உபரி நீர் ஆரணி ஆற்றில் பாய்ந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயில் காரணமாக தடுப்பணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து தற்போது வறண்டு காணப்படுகிறது. தடுப்பணை பகுதியில்தான் ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் பெரிய அளவிலான ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளது. இவற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஊத்துக்கோட்டையில் 10 பகுதிகளில் அமைத்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பி குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. தடுப்பணை வறண்டதால் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இதன் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தடுப்பணை வறண்டதால் ஊத்துக்கோட்டையில் பல வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story