காதலிக்கு பிறந்த நாள் பரிசு வழங்க நகை திருடிய வாலிபர் கைது


காதலிக்கு பிறந்த நாள் பரிசு வழங்க நகை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 May 2018 4:15 AM IST (Updated: 4 May 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

காதலிக்கு பிறந்த நாள் பரிசு வழங்க 5 பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலையில் மணீஷ்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஓருவர் கடைக்கு வந்தார். காதலிக்கு பிறந்த நாள் பரிசாக வழங்க புதிய வரவு நகை வேண்டும் என்று கேட்டார். மணீஷ்குமார் கடையில் இருந்த நகைகளை காண்பித்தார்.

அப்போது அந்த வாலிபர் அங்கிருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை திருடி கொண்டு ஓட்டம் பிடித்தார். இது குறித்து மணீஷ்குமார் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பாலு போலீசாருடன் திருட்டு நடந்த கடைக்கு விரைந்து சென்றார். கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது சத்தியவேடு போலீஸ் நிலையத்திற்கு அடகு கடைக்காரர் ஒருவர் போன் செய்து தன்னுடைய கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் 5 பவுன் தங்கச்சங்கிலியை தந்து விட்டு ரூ.50 ஆயிரம் தரும்படி கேட்கிறார். அவரை பார்த்தால் சந்தேகமாக உள்ளது என்று தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசாரும் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறியதாவது.

தன்னுடைய பெயர் வினோத்குமார் (வயது 30). ஊத்துக்கோட்டை அருகே உள்ள மதனம்பேடு கிராமத்தில் வசித்து வருகிறேன். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டு கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எங்கள் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வருகிறேன். இன்று (வெள்ளிக்கிழமை) காதலியின் பிறந்த நாள். காதலிக்கு பிறந்த நாள் பரிசாக விலை உயர்ந்த பொருளை பரிசாக கொடுக்க எண்ணினேன். பணம் இல்லாத காரணத்தால் திருட முடிவு செய்தேன். அதன்படி ஊத்துக்கோட்டை- சத்திவேடு சாலையில் உள்ள கடையில் நகை வாங்குவது போல் நடித்து 5 பவுன் தங்கச்சங்கிலியை திருடினேன். இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்து வினோத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story