பறவைகள் சரணாலயத்தில் ரூ.5 லட்சம் செலவில் கண்காணிப்பு கோபுரம்


பறவைகள் சரணாலயத்தில் ரூ.5 லட்சம் செலவில் கண்காணிப்பு கோபுரம்
x
தினத்தந்தி 4 May 2018 4:15 AM IST (Updated: 4 May 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்டுகளிக்கும் வகையில் ரூ.5 லட்சம் செலவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரக்கோட்டை, சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், கீழ-மேலச்செல்வனூர், தேர்த்தங்கல் ஆகிய பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் அருகே நயினார்கோவில் செல்லும் வழியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு கடந்த ஆண்டுகளில் அதிகஅளவில் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன. அந்த அளவிற்கு பறவைகளுக்கு ஏற்ற சரணாலயமாக வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பறவைகளுக்காக அப்பகுதி மக்கள் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடிக்கும் சந்தோசத்தையும் தியாகம் செய்து வருகின்றனர்.

இந்த சரணாலயத்தில் வனத்துறையின் சார்பில் வளர்க்கப்பட்டுள்ள மரங்கள் பறவைகள் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்க வசதியாக உள்ளதாலும், பெரிய கண்மாயின் அருகில் உள்ளதாலும் அதிகஅளவில் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக மாவட்டத்தில் மழை இல்லாததால் பறவைகள் சரணாயலத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை மிகக் குறைந்த அளவிலேயே இருந்துள்ளது. சிறிதளவில் வந்த வெளிநாட்டு பறவைகளும் கூடுகட்டாமல் பார்வையாளராக மட்டுமே வந்துசென்றுவிட்டன. உள்நாட்டு பறவைகளான சிறகி, கொக்கு, நாரை போன்ற பறவைகள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூடு கட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டன.

தற்போது இந்த சரணாலயத்தில் ஒருசில உள்நாட்டு பறவைகள் வந்து செல்வதை காணமுடிகிறது. இந்நிலையில் வெறிச்சோடி காணப்படும் பறவைகள் சரணாலயங்களில் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி பறவைகளின் வசதிக்காகவும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காகவும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு அதிகஅளவில் பறவைகள் வருவதால் அதனை கண்டுகளிக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியுடன் ரூ.5 லட்சம் செலவில் இந்த கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.

சரணாலயத்தின் முழு பகுதியையும் கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு கோபுரம் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுதவிர, தேர்த்தங்கல் சரணாலயத்தில் உள்ள மரங்களில் பறவைகள் தங்கி கூடு கட்டுவதற்கு ஏதுவான கட்டமைப்பை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்தால் அதற்கு தேவையான அனைத்து சாதகமான சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி வருவதாக வனச்சரகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Next Story