தேர்தலை முறையாக நடத்தக்கோரி தி.மு.க.வினர் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்


தேர்தலை முறையாக நடத்தக்கோரி தி.மு.க.வினர் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 4 May 2018 4:15 AM IST (Updated: 4 May 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலை முறையாக நடத்தக்கோரி கூடச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்தம்பாளையம்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள கூடச்சேரி தொடக்க வேளாண்மை கடன் சங்க தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 11 பேரும், தி.மு.க. சார்பில் 26 பேரும் மனு தாக்கல் செய்து இருந்தனர். நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் பரிசீலனை தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தகுதி வாய்ந்த வேட்பாளரின் பட்டியல் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேட்பு மனுக்களை திரும்ப பெரும் நாளான நேற்று தேர்தல் அதிகாரி வரவில்லை கூறப்படுகிறது. வருகிற 7-ந்தேதி கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தகுதி வாய்ந்த வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யக்கோரியும், அதன் பட்டியலை வெளியிட கோரியும், தேர்தல் அதிகாரி வராததை கண்டித்தும், தேர்தலை முறையாக நடத்தக்கோரியும் நேற்று தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணி தலைமையில் தி.மு.க.வினர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

அப்போது தேர்தலை முறையாக நடத்தக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நீதிமன்றத்தை அணுகி உரிய தீர்வை பெற்று கொள்ளுமாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story