சித்திரை திருவிழா நிறைவு பெற்றது ; கள்ளழகர் அழகர்மலைக்கு புறப்பட்டார்
சித்திரை திருவிழாவின் நிறைவு பெற்றதை தொடர்ந்து கள்ளழகர் அழகர்மலைக்கு புறப்பட்டார். இதையொட்டி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலத்தில் காட்சியளித்தன.
கள்ளந்திரி
மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவிற்காக, அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப்பெருமாள் கடந்த 28-ந்தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி வழியாக சுந்தரராஜன்பட்டியில் உள்ள மறவர் மண்டபத்தில் தங்கி, கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்தார்.
அவரை மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்து எதிர்சேவை செய்து, வணங்கி வரவேற்றனர். 30-ந்தேதி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்பு, ராமராயர் மண்டபம் சென்று, அங்கிருந்து புறப்பட்டு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தங்கினார்.
தொடர்ந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து, கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்தார். பிறது ராமராயர் மண்டபத்தில் தங்கிய கள்ளழகர் பக்தர்களுக்கு தசாவதாரத்தில் காட்சி அளித்தார். அதன்பின்னர் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் புறப்பட்டு, ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் தங்கினார்.
நேற்று மலைக்கு செல்லும் விழா நிகழ்ச்சியில், அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் வையாழியாகி அழகர்மலைக்கு புறப்பட்டார். தொடர்ந்து பக்தர்களிடம் பிரியாவிடை பெற்றுச்சென்ற கள்ளழகரை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்து வழியனுப்பி வைத்தனர். பின்னர் அவுட் போஸ்ட்டில் இருந்து தண்டியலில் எழுந்தருளிய கள்ளழகர், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில், மூன்றுமாவடி வழியாக அழகர்மலையை நோக்கி சென்றார்.
இதையொட்டி வழியில் உள்ள அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளில் கள்ளழகர் மலைக்கு செல்லும் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு கள்ளழகர் வருகையையொட்டி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்கள் விழாக்கோலத்தில் திகழ்ந்தது. அதில் கிராமங்கள் தோறும் திருக்கண், மண்டபங்களில் நாடகம், கரகாட்டம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
கள்ளழகர் மலைக்கு செல்லும் விழா, இந்த பகுதிகளில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து கலந்துகொண்டு கள்ளழகரை தரிசனம் செய்து, சாமியை மலைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அழகர்மலைக்கு எழுந்தருளி கள்ளழகர் இருப்பிடத்தை அடைகிறார்.
Related Tags :
Next Story