திருச்செந்தூர் அருகே பரிதாபம் மகள் மாயமான வேதனையில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை


திருச்செந்தூர் அருகே பரிதாபம் மகள் மாயமான வேதனையில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 May 2018 2:00 AM IST (Updated: 4 May 2018 7:00 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே மகள் மாயமான வேதனையில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே மகள் மாயமான வேதனையில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டல் தொழிலாளி 

திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் கிங் காலனியைச் சேர்ந்தவர் குமாரவேல் (வயது 51). இவர் அங்குள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மார்க்ரெட். இவர்களுக்கு சதீஷ் (27), செல்வம் (25) ஆகிய 2 மகன்களும், சந்தன வினிஷா (23) என்ற மகளும் உள்ளனர். சதீஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். செல்வம் கூலி வேலை செய்து வருகிறார்.

கடந்த மாதம் 16–ந் தேதி, வீட்டில் இருந்த சந்தன வினிஷா திடீரென்று மாயமானார். இதுகுறித்து குமாரவேல் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை 

இந்த நிலையில் மார்க்ரெட்டுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர், பக்கத்து ஊரான அடைக்கலாபுரம் பிலோமிநகரில் உள்ள தன்னுடைய தங்கையின் வீட்டில் வசித்து வருகிறார். மகள் மாயமானதால் குமாரவேல் மனவேதனையில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமாரவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலையில் மார்க்ரெட் தனது வீட்டுக்கு சென்றபோது அங்கு கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

சோகம் 

தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த குமாரவேலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகள் மாயமான வேதனையில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story