தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 250 மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் நீட் தேர்வுக்கு மையம் ஒதுக்கீடு கேரளாவுக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 250 மாணவர்களுக்கு வெளி மாநில தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 250 மாணவர்களுக்கு வெளி மாநில தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
நீட் தேர்வு
மத்திய அரசு மருத்துவ படிப்புக்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வை அறிவித்து உள்ளது. இந்த தேர்வுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ– மாணவிகள் 356 பேருக்கு 11 இடங்களில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுதவிர பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்களிலும் மாணவ– மாணவிகள் பயிற்சி பெற்று வந்தனர். இந்த தேர்வுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சுமார் 1,500 பேர் வரை விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் வெளியிடப்பட்டன.
அதிர்ச்சி
நுழைவுச்சீட்டுகளை பார்த்த பல மாணவ– மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். நெல்லை மையத்தை தேர்வு செய்தவர்களுக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளம், கோவை, மராட்டிய மாநிலத்தில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 200 பேரில் சுமார் 140 பேருக்கு எர்ணாகுளமும், ஒருவருக்கு மராட்டிய மாநிலத்திலும் மற்றவர்களுக்கு நெல்லையிலும் மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக நேற்று முன்தினம் முதல் தேர்வு மையங்களுக்கு புறப்பட தொடங்கினர். சில மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல இயலாத நிலையில் தேர்வு எழுதுவதை கைவிட்டனர்.
சிறப்பு பஸ்
இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து எர்ணாகுளத்துக்கு மாணவர்கள் செல்வதற்கு வசதியாக நேற்று இரவு 8.05 மணிக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. அதேபோன்று ரெயில்களிலும் மாணவர்கள் அதிக அளவில் புறப்பட்டு சென்றனர். மேலும் தமிழ்நாடு அரசு நீட் தேர்வு எழுதும் மாணவ–மாணவிகளுக்கு ரூ.1000 வழங்க உத்தரவிட்டு உள்ளது. இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று இரவு வரை அலுவலகத்தில் தயார் நிலையில் இருந்தனர்.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் கூறும் போது, நீட் தேர்வு எழுதும் மாணவ–மாணவிகள் உரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டை காண்பித்து ரூ.1000 மற்றும் 2–ம் வகுப்பு பயணச்சீட்டு கட்டணத்தையும் பெற்றுக்கொள்ளலாம். தற்போது பயண கட்டணத்தை பெற முடியாதவர்கள் தேர்வு எழுதிய பிறகு இந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறினார்.
மனஉளைச்சல்
தூத்துக்குடியை சேர்ந்த நீட் தேர்வு எழுதும் மாணவியின் தந்தை கூறும் போது, நீட் தேர்வு மையத்தை வெளி மாநிலத்தில் ஒதுக்கி இருப்பதால் காலவிரயம் ஏற்படுவதோடு, மனஉளைச்சலும் ஏற்பட்டு உள்ளது. முன்பின் தெரியாத இடத்துக்கு சென்று தங்கி இருக்க வேண்டும். அதன்பிறகு மையத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதே நேரத்தில் மனநிலையை சீராக வைக்க வேண்டும். இந்த சிரமங்கள் உள்ளன. தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் இருந்தால் எளிதாக தேர்வு எழுதி வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும் என்றார்.
Related Tags :
Next Story