மகன்களை பறிகொடுத்த துக்கத்தில் தீக்குளித்து தாய் தற்கொலை
குட்டையில் மூழ்கி இறந்த 2 மகன்களை பறிகொடுத்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
நெய்க்காரப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சாமிநாதபுரம் ஜி.வி.ஜி. நகரை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 39). இவருடைய மனைவி வனிதாமணி (30). இவர்களுடைய மகன்கள் சுதர்சன் (9), ரோஹித் (7). கொழுமத்தில் உள்ள ஒரு தனியார் காகித ஆலையில் கோதண்டராமன் வேலை பார்க்கிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சுதர்சன் 3-ம் வகுப்பும், ரோஹித் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் விடுமுறைக்காக உடுமலை தாந்தோணியில் வசிக்கும் தாத்தா ரங்கசாமியின் வீட்டுக்கு தாய்-தந்தையுடன் அண்ணனும், தம்பியும் சென்றனர். ரங்கசாமி தாந்தோணி அருகே உள்ள சேரன் நகரில் குத்தகைக்கு எடுத்திருந்த நிலத்தில் பாசனத்துக்கு தேவையான தண்ணீரை சேமித்து வைப்பதற்காக நிலத்தில் குழி தோண்டி அதில் கெட்டியான பாலித்தீன் தார்ப் பாய்களை விரித்து பண்ணை குட்டை அமைத்திருந்தார்.
நேற்று முன்தினம் காலை தாத்தாவுடன் அந்த தோட்டத்துக்கு சுதர்சனும், ரோஹித்தும் சென்றனர். அவர்களை தோட்டத்தில் விளையாடவிட்டுவிட்டு ரங்கசாமி விவசாய பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். பண்ணைக்குட்டை அருகே விளையாடிக் கொண்டிருந்த அண்ணன்-தம்பி இருவரும் எதிர்பாராதவிதமாக குட்டைக்குள் தவறி விழுந்தனர். சிறிது நேரத்தில் இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாலையில் சிறுவர்களின் உடல்கள் சாமிநாதபுரம் கொண்டுவரப்பட்டு அப்பகுதியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் 2 மகன்களையும் பறிகொடுத்த துக்கத்தில் இருந்த வனிதாமணி இரவு முழுவதும் ‘ஓவென’ அழுது புலம்பி துடித்தார். அவரை அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் ஆறுதல்படுத்தினர். ஆனாலும் மகன்களின் புகைப்படத்தை கையில் வைத்தபடி பார்த்துக்கொண்டிருந்த வனிதாமணி இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தார்.
நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வேளையில் வீட்டின் பின்புறம் சென்ற வனிதாமணி, உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். சிறிது நேரத்தில் கண்விழித்த உறவினர் ஒருவர் வனிதாமணியை காணாமல் தேடியபோது, வீட்டின் பின்புறத்தில் அவர் தீயில் கருகிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே மற்ற உறவினர்களை அவர் எழுப்பினார். அவர்கள் வனிதாமணி மீது பற்றிய தீயை தண்ணீரை ஊற்றி அணைத்துவிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வனிதாமணி, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சம்பவம் குறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story