புதிய சிலை செய்ததில் மோசடி: பழனி முருகன் கோவில் குருக்களிடம் விசாரணை


புதிய சிலை செய்ததில் மோசடி: பழனி முருகன் கோவில் குருக்களிடம் விசாரணை
x
தினத்தந்தி 4 May 2018 11:00 PM GMT (Updated: 4 May 2018 6:31 PM GMT)

புதிய சிலை செய்ததில் நடந்த மோசடி தொடர் பாக, பழனி முருகன் கோவில் குருக்களிடம் போலீஸ் அதிகாரி விசாரணை நடத்தினார்.

பழனி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில், போகர் என்னும் சித்தரால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.

இந்த சிலை சேதம் அடைந்திருப்பதாக கூறி, தங்கத்தால் ஆன புதிய சிலையை பிரதிஷ்டை செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்காக திருத்தணி முருகன் கோவிலில் 10 கிலோ தங்கம் பெறப்பட்டது. புதிய சிலையை, ஸ்தபதி முத்தையா தலைமையிலான குழுவினர் உருவாக்கினர்.

கடந்த 2003-ம் ஆண்டில், நவபாஷாண சிலையின் அருகே புதிய சிலை பிர திஷ்டை செய்யப்பட்டு பூஜை நடந்து வந்தது. ஆகம விதி களின்படி ஒரு கருவறையில் 2 சிலைகள் இருக்கக்கூடாது என்று கூறப்பட்டது. இதனால் கடந்த 2004-ம் ஆண்டில் அந்த சிலை கருவறையில் இருந்து அகற்றப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள முன்மண்டபத்தில் அந்த சிலை வைக்கப்பட்டு தினமும் 2 முறை தீபாராதனை மற்றும் நெய்வேத்தியம் நடந்து வந்தது.

இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாஷாணத்தாலான சிலையை கடத்தி சென்று, வெளிநாட்டில் விற்பனை செய்வதற்காகவே புதிய சிலை உருவாக்கப்பட்டதாக கூறப் பட்டது. மேலும் புதிய சிலை செய்ததில், மோசடி நடந் திருப்பதாகவும் புகார் கூறப் பட்டது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், புதிய சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பது உறுதி செய் யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்தபதி முத்தையா, இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்களும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட் டது.

இது தொடர்பான விசா ரணை துரிதமாக நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித் தனர். சிலை மோசடியில் ஈடுபட்டவர்களை தப்ப வைக்கவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட தாக புகார் எழுந்தது.

இந்த சூழ்நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசா ரணையில் இருந்து மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தற் போது இந்த வழக்கு விசா ரணை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. 2-ம் கட்ட விசாரணையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடங்கி உள்ள னர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கருணாகரன், நேற்று இரவு பழனிக்கு வந்தார். தெற்கு ரதவீதியில் உள்ள முருகன் கோவில் குருக்கள் சுகிசிவம் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவரிடம், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார்.

சுகிசிவத்தின் தந்தை கண்ணன் குருக்கள். இவர், புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட காலத்தில் முருகன் கோவிலில் பட்டத் துக்குருக்களாக இருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார். அவரது மகனான சுகிசிவத்திடம், சிலை தொடர்பான ஏதேனும் ஆவணங்கள், விவரங்களை சேகரிக்கவே போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை நடத்தியதாக தகவல் வெளி யாகி உள்ளது.

Next Story