ஆமை வேகத்தில் நடைபெறும் வாய்க்கால் சீரமைக்கும் பணி


ஆமை வேகத்தில் நடைபெறும் வாய்க்கால் சீரமைக்கும் பணி
x
தினத்தந்தி 5 May 2018 3:45 AM IST (Updated: 5 May 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே ஆமை வேகத்தில் வாய்க்கால் சீரமைக்கும் பணி நடந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கூடலூர்

தேனி மாவட்டம், கம்பம் பள்ளதாக்கு பகுதிகள் முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. முல்லைப் பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் லோயர்கேம்ப் வைரவன் வாய்க்காலில் இருந்து தனி வாய்க்கால் அமைத்து 5 மடை வழியாக வயல்வெளிகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இதன் மூலம் சுமார், 1,500 ஏக்கர் நிலங்களில், இரு போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் பொதுப்பணித்துறையினர் வாய்க்கால் கரையை சீரமைத்து வந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களாக சீரமைப்பு பணிகளை செய்யவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகளே வாய்க்காலை சீரமைத்து வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக போதிய அளவு தண்ணீர்் இல்லாததால் ஒரு போகம் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டு வரப்படுகிறது. இதனால் விவசாயிகள் சீரமைப்பு பணிகளை செய்ய விவசாயிகள் முன் வரவில்லை. எனவே வாய்க்கால் முழுவதும் முட்புதர்கள் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து உள்ளது. மேலும் வாய்க்கால் கரைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சேதம் அடைந்த நிலையில் இருந்து வந்தது. இதனால் பாசனத்துக்கு வரும் தண்ணீர்் போதுமானதாக இல்லை. இதுகுறித்து குறைதீர்்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம், விவசாயிகள் வாய்க்கால் கரைகளை சீரமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கூடலூர் அருகே வைரவன் வாய்க்காலில் இருந்து சட்டரஸ் வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வரத்து வாய்க்காலை சீரமைக்கவும், தடுப்பு சுவர்கள் கட்டவும், உலக வங்கி மூலம் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்பார்வையில் கடந்த 2 மாதங்களாக பணிகள் தொங்கப்பட்டு நடைபெற்று வந்தது. தற்போது 1 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே பணிகள் நடைபெற்று உள்ளது. இந்த பணிகளும் முழுமை பெறவில்லை. ஆமை வேகத்தில் நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்னும் 4 கிலோ மீட்டர் தூரம் வரை வாய்க்கால் சீரமைக்கும் பணி உள்ளது.

அடுத்த மாதம் ஜுன் முதல் வாரத்தில் பாசனத்துக்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். எனவே தண்ணீர்் திறப்பதற்கு முன்பே பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரத்து வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று விவசாயிளும், நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story