டாக்டர் நியமிக்கப்படாத கால்நடை மருத்துவமனை விவசாயிகள் அவதி
லோயர்கேம்ப்பில் கால்நடை மருத்துவமனைக்கு டாக்டர் நியமிக்கப்படாததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கூடலூர்
கூடலூர் நகர சபையின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்ப், பளியன்குடி, நாயக்கர்தொழு, கண்ணகிநகர், அம்மாபுரம் மற்றும் வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள கால்நடைகள் நோயால் பாதிக்கப்பட்டால் லோயர்கேம்ப்பில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்கப்படும்.
மேலும், இந்த கால்நடை மருத்துவமனையில் உள்ள வெக்கை நோய் தடுப்பு மையம் சாவடியில் பரிசோதனை செய்து சான்று பெற்ற பின்னர் தான் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக கால்நடைகளை கொண்டு செல்ல முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த கால்நடை மருத்துவமனைக்கு டாக்டர் நியமிக்கப்படாததால், வாரத்திற்கு இரு முறை மட்டும் கூடலூரில் உள்ள தலைமை கால்நடை டாக்டர் இங்கு வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இதனால் மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருந்து கால்நடைகளுக்கு சிகிச்சை பெறவேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் கால்நடை மருத்துவமனை பெரும்பாலான நாட்கள் பூட்டியே கிடப்பதால் மருத்துவமனையை சுற்றிலும் முட்புதர்கள் வளர்ந்து விஷப்பாம்புகள் படை எடுத்து வருகின்றன. எனவே லோயர்கேம்ப்பில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தரமாக டாக்டரை நியமிக்க வேண்டும், தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு தகுதி சான்றுகள் வழங்கிய பின்பு இறைச்சிக்காக கொண்டு கால்நடைகளை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story