குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
நத்தம் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை
நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது சங்கரன்பாறை. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலைத் தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் வறட்சி காரணமாக அந்த ஆழ்துளை கிணறு தண்ணீரின்றி வறண்டது. இதையடுத்து அதன் அருகே புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இருப்பினும் அந்த ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் இல்லாததால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
கடந்த சில மாதங்களாகவே அப்பகுதி மக்களுக்கு, லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதுவும் தற்போது நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் நத்தம்-துவரங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸ், மேலாளர் தட்சிணாமூர்த்தி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ரோஜா, நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 15 நாட்களுக்குள் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும், அதுவரை லாரிகள் மூலம் காலை, மாலை நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story