மகா காளேஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
வானூர் அருகே மகா காளேஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் கொள்ளை போகாமல் தப்பின.
விழுப்புரம்
வானூர் தாலுகா இரும்பை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா காளேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அர்ச்சகராக பஞ்சாபிகேஷன் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவில் கதவுகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர், கோவிலின் அருகே உள்ள திருமண மண்டபத்தின் மேல் ஏறி கோவில் வளாகத்தில் உள்ள இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள சாமி சிலைகள் இருக்கும் அறை கதவின் பூட்டை உடைக்க முயன்றனர்.
அப்போது கோவில் வளாகத்தை சுற்றித்திரிந்த நாய்கள் குரைத்தன. இந்த சத்தம் கேட்டு கோவில் காவலாளி பாபு மற்றும் அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதைப் பார்த்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்தது ஆரோவில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
கோவிலில் சாமி சிலைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு பூட்டை உடைக்க முயற்சி செய்யும்போது பொதுமக்கள் விரைந்து வந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் கோவிலில் இருந்த சிவன், அம்மன், முருகர், விநாயகர், நடராஜர் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக சிலைகள் கொள்ளை போகாமல் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள் சிலை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வானூர் அருகே கோவில் பூட்டை உடைத்து சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story