பணி நிரந்தரம் செய்யக்கோரி தோட்டக்கலை துறை தினக்கூலி பணியாளர்கள் போராட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி தோட்டக்கலை துறை தினக்கூலி பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 May 2018 4:15 AM IST (Updated: 5 May 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி தோட்டக்கலை துறையில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோடை சீசனையொட்டி பூங்காவில் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, நஞ்சநாடு தோட்டக்கலை பண்ணை, தும்மனட்டி தோட்டக்கலை பண்ணை உள்ளிட்ட தோட்டக்கலை பூங்காக்களில் தினக்கூலி பணியாளர்கள் சுமார் 800 பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.250 வழங்கப்படுகிறது.

தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை தொழிலாளர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் தோட்டக்கலை துறையில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்து ஊட்டி தாவரவியல் பூங்காவில் திரண்டனர். அங்கு பூங்கா அலுவலகத்தின் முன்பகுதியில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மாவட்ட தோட்டக்கலைத்துறை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் போஜராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்த் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தினக்கூலி பணியாளர்களை தோட்டக்கலை நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். இந்த உள்ளிருப்பு போராட்டம் நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கூறிய தாவது:-

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை. இதனால் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தோட்டக்கலை பண்ணை மற்றும் பூங்காக்களில் இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணியாற்றி உள்ள அனைத்து தற்காலிக தினக்கூலி பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

மேற்கண்ட இரண்டு கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை தினக்கூலி பணியாளர்களுக்கு இடைக்கால ஊதிய உயர்வாக மாவட்ட கலெக்டர் நிர்ணயிக்கும் மாவட்ட அட்டவணை ஊதியம் வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் வாராந்திர விடுமுறை அளிக்கப்பட வேண்டும். வாராந்திர விடுமுறை நாட்களுக்கு முழு ஊதியம் அளிக்க வேண்டும். அந்த நாட்களில் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். பண்ணை மற்றும் பூங்காக்களில் பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் சட்டப்படி தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் படி, பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் செய்யும் அதே வேலையை செய்து வரும் பணியாளர்களுக்கு சம ஊதியம், காலமுறை ஊதியம் நிலுவைத் தொகையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான தினக்கூலி பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுவது இல்லை. அவ்வாறு பிடித்தம் செய்யப்படாத தினக்கூலி பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்து அவர்களின் ஓய்வுக்கால பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பணியாளர்களின் பணி ஓய்வு, இறப்பு, ராஜினாமா போன்ற காரணங்களால் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு புதிய தினக்கூலி பணியாளர்கள் நிரப்பப்பட வேண்டும்.

மஸ்தூர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளுக்கு பண்ணையில் உள்ள தினக்கூலி பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் உயர்த்த வேண்டும். பணியில் இருக்கும் போது மரணமடையும் பணியாளர்களுக்கு ஈமச்சடங்கிற்கான முன் பணம் ரூ.5 ஆயிரம் மற்றும் மரணத்தொகை ரூ.2 லட்சத்தை வழங்க வேண்டும். தினக்கூலி பணியாளர்களுக்கு வாரத்திற்கு 6 நாட்கள் வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நிதிநிலையை காரணம் காட்டி பணியாளர்களுக்கு வேலை மறுத்தால் அந்நாட்களுக்கு பணியாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர்களை பழிவாங்கும் வகையில் பணியிட மாற்றம் செய்வதை கைவிட வேண்டும். மேற்கண்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் (அதாவது நேற்று) தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பண்ணைகள் மற்றும் பூங்காக்களில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் கோடை சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ள மலர் தொட்டிகள் மற்றும் பூக்களை பராமரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. கோடை சீசனை முன்னிட்டு காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், வேலைநிறுத்தம் காரணமாக அதற்கான பணிகள் பாதிக்கும் நிலைமை உள்ளது. 

Next Story