மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த போது மழை வெள்ளம் இழுத்துச்சென்றதில் முதியவர் பலி + "||" + The old man kills the rain flood

வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த போது மழை வெள்ளம் இழுத்துச்சென்றதில் முதியவர் பலி

வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த போது மழை வெள்ளம் இழுத்துச்சென்றதில் முதியவர் பலி
அவினாசி அருகே வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த முதியவரை மழை வெள்ளம் இழுத்துச்சென்றதில் அவர் பலியானார். திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் ரூ.2 கோடி மதிப்புள்ள ஆடைகள் சேதமாயின.
திருப்பூர்,

நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியநிலையில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு மழை கொட்டித்தீர்த்தது. திருப்பூரில் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 3 மணி வரை பெய்தது.


திருப்பூர் மாவட்டம் அவினாசி சிந்தாமணிப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கருப்பன்(வயது 85). இவருடைய மனைவி ரங்கம்மாள்(70). இவர்கள் இருவரும் சொந்தமாக ஆடு வைத்து வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கருப்பன் தனது வீட்டுக்கு வெளியே முற்றத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இரவு மழை அதிக அளவில் பெய்ததால், கருப்பன் வீட்டு முற்றத்தின் வழியாக மழை வெள்ளம் பெருக்கெடுத்து அருகில் உள்ள குளத்தை நோக்கி பாய்ந்தது.

2 மணியளவில் மழை வெள்ளம் அதிகமானதால் கருப்பன் எழுந்து சத்தம் போட்டார். ஒரு கட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய அவர் இழுத்துச்செல்லப்பட்டார். அதிகாலை 3 மணி அளவில் அருகில் உள்ள குளத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது.

திருப்பூர் ரெயில்வே மேம்பாலம் அருகே ஹார்வி ரோட்டில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இந்த வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவில் பெய்த மழை காரணமாக தொழிற்பேட்டையில் உள்ள சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. நேரம் செல்ல செல்ல மழைநீர் ரோட்டோரம் தாழ்வான பகுதிகளில் அமைந்திருந்த பனியன் நிறுவனங்களுக்குள் புகுந்தது.

நிட்டிங் நிறுவனங்கள், உள்நாட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் பனியன் நிறுவனங்கள், மின் மோட்டார் நிறுவனம் என 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பனியன் நிறுவனங்களுக்குள் தண்ணீர் 2 அடிக்கு மேல் தேங்கியது. இதனால் அந்த நிறுவனங்களில் ஆடைகளை தயாரித்து சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக இருப்பு வைக்கப்பட்ட பண்டல்கள் மழைநீரில் நனைந்தன. மழைநீருடன் சேறும், சகதியும் பாய்ந்தது. இதனால் ஆடைகளில் சேறு படிந்ததால் முற்றிலும் சேதமானது.

அதுபோல் நிட்டிங் நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எந்திரங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த எந்திரங்கள் பழுதடைந்தன. அங்கு வைக்கப்பட்டு இருந்த மின்மோட்டார்கள் மழைவெள்ளத்தில் மூழ்கி சேதமாயின.

மழை நீர் புகுந்ததால் ரூ.2 கோடி மதிப்புள்ள ஆடைகள் சேதமடைந்துள்ளதாக பனியன் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவுப்படி, திருப்பூரில் 90 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 54 மில்லி மீட்டரும், காங்கேயத்தில் 138 மில்லி மீட்டரும், அவினாசியில் 84 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 63 மில்லி மீட்டரும், மூலனூரில் 29 மில்லி மீட்டரும், உடுமலையில் 30 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.