நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணை முடிந்தது: வருகிற 15-ந் தேதிக்குள் கவர்னரிடம் அறிக்கை தாக்கல்


நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணை முடிந்தது: வருகிற 15-ந் தேதிக்குள் கவர்னரிடம் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 5 May 2018 5:00 AM IST (Updated: 5 May 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணை முடிந்து விட்டதாகவும், வருகிற 15-ந் தேதிக்குள் கவர்னரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தெரிவித்தார்.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியாக விசாரணை நடத்தியுள்ளனர்.

இதேபோன்று கவர்னரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானமும் மதுரையில் முகாமிட்டு விசாரணை தொடங்கினார். ஏற்கனவே 50 பேர் வரை விசாரித்த அவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியின் ஆங்கிலத் துறை இணை பேராசிரியர் மோகனிடம் நேற்று விசாரணை நடத்தினார். இதற்காக பேராசிரியர் மோகன், காலை 10.45 மணிக்கு அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்தார். சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், நிர்மலா தேவி விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் பேராசிரியர் முருகனும், நானும் நண்பர்கள். எஸ்.டி.-எஸ்.டி. அசோசியேசனில் உறுப்பினராக முருகன் உள்ளார். நானும் அதில் இருப்பதினால் என்னை அழைத்து விசாரித்துள்ளனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் அளித்திருக்கிறேன். அவர்கள் அதை பதிவு செய்துள்ளனர் என்றார்.

விசாரணை அதிகாரியிடம் ஆஜராகிய மோகன், சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தை சேர்ந்தவர். தற்போது அவர் மதுரை கருப்பாயூரணி பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த 1995-ம் ஆண்டு உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அதன்பின்னர் அவர் தற்போது இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் வழங்கியதன் பேரில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திலும் இவரிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து நேற்று இரவு அரசு சுற்றுலா மாளிகையில் விசாரணை அதிகாரி சந்தானம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

நிர்மலாதேவி விவகாரம் குறித்த விசாரணை முடிந்து விட்டது. இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறேன். அவர்கள் அளித்த தகவல்களையும் பதிவு செய்திருக்கிறேன். ஒரு சில ஆணவங்கள் தமிழில் இருக்கின்றன. அதனை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்காக நான் கூடுதல் அவகாசம் கேட்கமாட்டேன்.

மே 15-ந்தேதிக்குள் இதுதொடர்பாக அனைத்து அறிக்கைகளையும் கவர்னரிடம் தாக்கல் செய்வேன்.

இவ்வாறு சந்தானம் கூறினார்.

Next Story