அனுமதியின்றி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு


அனுமதியின்றி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 May 2018 10:45 PM GMT (Updated: 4 May 2018 8:39 PM GMT)

அனுமதியின்றி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாரே மூடிவிட்டு சென்றனர்.

தாம்பரம்,

அரசு மதுபான கடை திறப்பதற்கு வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு துறை ஆகியவைகளின் அனுமதி பெறவேண்டும். கோவில்கள், பள்ளிகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் மதுபான கடைகள் திறக்கக்கூடாது என நீதிமன்ற உத்தரவு உள்ளது.

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மப்பேடு புத்தூர் பகுதியில் எந்த ஒரு அனுமதியும் இன்றி அரசு மதுபான கடை ஒன்று திறக்கப்பட்டது. இதுபற்றி சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது நாங்கள் மதுபான கடை திறப்பதற்கு மேலிடத்தில் அனுமதி பெற்றுவிட்டோம். உங்களிடம் அனுமதி பெறவேண்டும் என எங்களுக்கு அவசியமில்லை என்று போலீசாரை தரக்குறைவாக பேசினர்.

இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் பேசியபோது, அவர்களும் போலீசாரிடம் பார் உரிமையாளருக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

அப்பகுதி பொதுமக்களும் அங்கு அனுமதியின்றி மதுக்கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மதுபான கடையை பொதுமக்கள் நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்போவதாக சேலையூர் போலீசாருக்கு உளவுத்துறையினர் மூலம் தகவல் கிடைத்தது.

இதுபற்றி போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபான கடையினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும் தெரிவித்தனர். அதிகாரிகளின் உத்தரவின்படி போலீசார் அங்கு சென்று அந்த மதுக்கடையை மூடிவிட்டு சென்றனர்.

Next Story