அழகர்மலை சென்றடைந்தார் கள்ளழகர்: பூசணிக்காய் திருஷ்டி சுற்றி, மலர் தூவி பக்தர்கள் வரவேற்பு


அழகர்மலை சென்றடைந்தார் கள்ளழகர்: பூசணிக்காய் திருஷ்டி சுற்றி, மலர் தூவி பக்தர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 5 May 2018 3:45 AM IST (Updated: 5 May 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து கள்ளழகர் அழகர்மலைக்கு சென்றடைந்தார். பூசணிக்காய் திருஷ்டி சுற்றி மலர் தூவி பக்தர்கள் அழகருக்கு வரவேற்பு அளித்தனர்.

அழகர்கோவில்,

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இந்த விழா கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது. 28-ந்தேதி மாலை தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து 3 மாவடி எதிர் சேவை நடைபெற்றது. பின்னர் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கும் காட்சியும், ராமராயர் மண்டபத்தில் தசாவதாரமும் நடந்தது. பின்னர் பூப்பல்லக்கில் எழுந்தருளி தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் பிரியாவிடை பெற்று கள்ளழகர் அழகர்மலைக்கு திரும்பினார். நேற்று காலை 9.40 மணிக்கு கோட்டை வாசல் வந்தடைந்தார்.

தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பாக வையாழியாகும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் முழங்கி வணங்கி வண்ண மலர்கள் தூவி வரவேற்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. பின்னர் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.

இதனையடுத்து கோவில் பிரகாரத்தில் 21 பெண்கள் பூசணிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றினர். பின்னர் மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவள்ளி கள்ளழகரை வரவேற்றது. தொடர்ந்து 10.25 மணிக்கு கள்ளழகர் பெருமாள் கோவிலுக்குள் சென்று சேர்ந்தார். அங்கு விஷேச பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த வருடம் சுமார் 435 மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருளினார். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 29 உண்டியல் பெட்டிகள் மதுரை வரை சென்று திரும்பியது. இந்த ஆண்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பாரம்பரிய வழக்கப்படி கள்ளழகர் ஆற்றில் இறங்கியது சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

இந்த திருவிழா நிகழ்ச்சிகளை காண்பதற்கு வழக்கத்தைவிட பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்பார்வையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

Next Story