ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 5 May 2018 4:00 AM IST (Updated: 5 May 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு திண்டல் வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில, மத்திய அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும், மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இளைஞர்-இளம்பெண்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி சிறு, நடுத்தர தொழில் தொடங்க இருந்தால், தொழில்முனைவோர்களுக்கு வங்கிக்கடன் வழங்கப்படுகிறது எனவே இந்த வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

முகாமில் 83 தனியார் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்தனர். இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்அடைந்தனர். மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், சேலம் வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் ஞானசேகரன், கல்லூரியின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். முடிவில் கல்லூரி முதல்வர் ஜெயராமன் நன்றி கூறினார்.

Next Story