மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருக்கு 20 மாதம் சிறை தண்டனை
திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருக்கு 20 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
திருச்சி
திருச்சி கே.கே.நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுக்கோட்டை மெயின்ரோடு ஜெயில் கார்னர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 50). இவர் கடந்த 4.7.2016 அன்று இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அதை காணவில்லை.
இது குறித்து கண்ணன் கே.கே.நகர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிளை திருடியவரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், மோட்டார் சைக்கிளை திருடியவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கிலாப்பூர் ஜீவாநகரை சேர்ந்த கருணாநிதி மகன் பாபுஜான்(26) என்பது தெரியவந்தது.
இந்நிலையில் திருச்சி கே.கே.நகர் போலீசாரால் தேடப்பட்டு வந்த பாபுஜானை, வடகாடு போலீசார் 28.7.2016 அன்று மற்றொரு வழக்கில் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருச்சி கே.கே.நகர் போலீஸ் எல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் பாபுஜான் கைது செய்யப்பட்டார். மேலும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் மீட்டனர்.
பாபுஜான் மீதான வழக்கு விசாரணை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து நடந்து வந்த வழக்கின் விசாரணை நேற்று முடிந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள் திருடியதற்காக பாபுஜானுக்கு 20 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story