மாவட்ட செய்திகள்

தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு + "||" + Tokaimalai Resistance to joint venture water

தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு

தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு
தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலை அருகே கீழகுறப்பாளையம் காவிரி ஆற்றுப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 56 பெண்கள் உள்பட 132 பேரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றியங்களை சேர்ந்த 253 கிராம குடியிருப்புகளுக்கான காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக குளித்தலை அருகே வதியம் ஊராட்சிக்கு உட்பட்ட காவிரி ஆற்றுப்பகுதியில் ஆழ்குழாய் மற்றும் குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் எடுக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதற்கு வதியம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தை கூட்டங்களிலும் முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் வதியம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ குறப்பாளையம் காவிரி ஆற்றுப்பகுதியின் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று பணிகள் நடைபெறும் காவிரி ஆற்றுப்பகுதிக்கு சென்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆற்றுக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வதியம் காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து மணப்பாறை- மருங்காபுரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஒரு நாளைக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அரசு விதி முறையை மீறி ஆற்றில் இருந்து பல அடி ஆழத்தில் மணல் அள்ளிய காரணத்தால் போதிய தண்ணீர் கிடைக்காததால் கூடுதலாக பல இடங்களில் ஆழ்குழாய் அமைத்து அதன்மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதன் காரணமாக வதியம் ஊராட்சி பகுதியில் உள்ள மரங்கள் அனைத்தும் காய்ந்துவிட்டது. மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கும், குடிப்பதற்கும் கூட தண்ணீர் இன்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் இப்பகுதி வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். எனவே இத்திட்டத்தை முழுமையாக கைவிடவேண்டும். இல்லை என்றால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திருப்பி ஒப்படைப்போம். மேலும் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தடை ஆணை பெறுவதற்கு மனு தாக்கல் செய்துள்ளோம்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை வட்டாட்சியர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு வந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு முத்து கருப்பன், இது அரசின் திட்டம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடமே தெரிவிக்க வேண்டும், இதுபோல் போராட்டத்தில் ஈடுபடுவது முறையற்ற செயல் என்று கூறி அனைவரையும் கைது செய்வதாக கூறினார். பின்னர் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 56 பெண்கள் உள்பட 132 பேர் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் இருந்த ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.