மாவட்ட செய்திகள்

பிரபல நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சம் கையாடல் 3 பேர் கைது + "||" + In the famous financial institution Rs 12 lakhs Embezzled 3 people arrested

பிரபல நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சம் கையாடல் 3 பேர் கைது

பிரபல நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சம் கையாடல் 3 பேர் கைது
அரக்கோணத்தில் பிரபல நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சம் கையாடல் செய்ததாக ஊழியர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்,

தமிழகம் முழுவதும் பிரபலமாக இயங்கும் நிதி நிறுவனத்தின் கிளை அரக்கோணம் சுவால்பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு அலுவலராக காந்தி (வயது 23), நகை மதிப்பீட்டாளராக நடராஜன் (49) மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இருவரும் திருத்தணியை சேர்ந்தவர்களாவர். இந்த நிதி நிறுவனத்தில் பலர் நகைகளை அடகு வைத்து ஈட்டுக்கடன் பெற்றுள்ளனர்.


இந்த நிலையில் அரக்கோணம் பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவர் காந்தி மற்றும் நடராஜனை அணுகி, “தனது நகை வங்கியில் அடமானமாக உள்ளது. அதனை மீட்க ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை கொடுத்தால் நகைகளை மீட்டு உங்களிடமே அடகு வைத்து விடுகிறேன்” என்று கூறியுள்ளார். தங்களுக்கு தெரிந்தவர்தானே என இருவரும் மேகநாதனுக்கு அவர் கேட்டபடி ரூ.12 லட்சத்து 40 ஆயிரத்தை கொடுத்தனர். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட மேகநாதன் அதன்பிறகு நிதிநிறுவனத்துக்கு வரவில்லை.

இதனிடையே இந்த நிதிநிறுவனத்தின் தினசரி செயல்பாடுகள் குறித்து வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த நிலையில் ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் கணக்கில் குறைந்தது தெரியவரவே அது குறித்து தோட்டப்பாளையம் தலைமை அலுவலக மார்க்கெட்டிங் மேலாளர் பச்சையப்பன் கேட்டுள்ளார்.

அப்போது மேகநாதனுடன் சேர்ந்து அலுவலர் காந்தி மற்றும் நகை மதிப்பீட்டாளர் நடராஜன் ஆகியோர் ரூ.12 லட்சத்து 40 ஆயிரத்தை கையாடல்செய்தது தெரியவந்தது. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் பச்சையப்பன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து அலுவலர் காந்தி, நகை மதிப்பீட்டாளர் நடராஜன், பணத்தை வாங்கிச்சென்று திருப்பித்தராத மேகநாதன் ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.