திரவுபதி அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழா
நெய்வனம், அத்தியூர்குடிக்காட்டில் உள்ள திரவுபதி அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர்.
செந்துறை
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நெய்வனம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீ மிதி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரவு வீதி உலா நடைபெற்றது. 27-ந் தேதி அர்ச்சுனன் திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக திரவுபதி அம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தூக்கிக்கொண்டும் தீ மிதித்தனர்.
இதில் செந்துறை, நெய்வனம் நல்லாம்பாளையம், இலங்கைச்சேரி, உஞ்சினி, சிறுகடம்பூர், கீழமாளிகை, மருவத்தூர், இலைக்கடம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மைகள், பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க செந்துறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்து அத்தியூர்குடிக்காடு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான தீ மிதி திருவிழா தொடங்கியது. அதன்படி கடந்த 18 தினங்களாக அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Related Tags :
Next Story