மனிதர்களை அச்சுறுத்தும் மான்கள்!
பொதுவாக மனிதர்களால்தான் விலங்குகளுக்கு ஆபத்து நேரும். ஆனால் கனடாவில் ஓர் ஊரில் மான்களைக் கண்டு மனிதர்கள் மிரளுகிறார்கள்.
கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள சிறிய நகரம், செயின்ட் ஆண்ட்ரூஸ். வெறும் 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்நகரில், இரண்டாயிரத்துக்கும் குறைவான மக்களே வசிக்கிறார்கள். ஆனால் இங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 15 மான்கள் வீதம் வசிக்கின்றன.
வீடுகளை சேதப்படுத்துவது, தோட்டங் களைச் சிதைப்பது, தெருக்களில் அசுத்தம் செய்வது, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பது என்று இந்த மான்களின் தொல்லைகளுக்கு அளவே இல்லை. மான்களை என்ன செய்வது என்று மக்களும் நகர நிர்வாகமும் கைபிசைந்துகொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து செயின்ட் ஆண்ட்ரூஸ் நகர மேயர் கூறுகையில், ‘இப்படி ஒரு சூழ்நிலையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அழகிய இந்த மான்களைத் துன்புறுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இந்த மான்கள் நகரையே மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாற்றிக்கொண்டிருக்கின்றன’ என்கிறார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக மான்களை வேட்டையாடுவதா அல்லது அவற்றை ஓரிடத்தில் கொண்டுபோய் அடைப்பதா என்று தீவிரமாக விவாதித்து வருகிறார்கள்.
பொதுவாக சாதுவாகக் காணப்படும் மான் களால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று கற்பனை செய்வதுகூடக் கடினம்தான்!
Related Tags :
Next Story