மாவட்ட செய்திகள்

விண்வெளிக்குப் பறக்கப்போகும் 3-வது இந்தியப் பெண்! + "||" + 3rd Indian women to fly into space

விண்வெளிக்குப் பறக்கப்போகும் 3-வது இந்தியப் பெண்!

விண்வெளிக்குப் பறக்கப்போகும் 3-வது இந்தியப் பெண்!
விண்ணுக்குப் பறக்க போகும் மூன்றாவது இந்தியப் பெண் ஷாவ்னா பாண்ட்யா என்று கூறப்படுகிறது.
கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்சுக்குப் பிறகு விண்ணுக்குப் பறக்கும் மூன்றாவது இந்தியப் பெண்ணாக ஷாவ்னா பாண்ட்யா இருக்காலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் தனது வேர்களைக் கொண்ட ஷாவ்னா பிறந்தது, கனடா ஆல்பர்ட்டாவில்.

பொது மருத்துவம் முடித்து, பயிற்சி அறுவைசிகிச்சை நிபுணராக இருக்கிற ஷாவ்னா, ‘குடிமக்கள் அறிவியல் விண்வெளி வீரர் திட்டத்தின்’ கீழ் இரண்டு பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த இருவரும், 8 விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து இந்த ஆண்டு விண்வெளிக்குப் பறக்கவிருக்கிறார்கள்.

‘நட்சத்திரங்களை எட்டித் தொடவேண்டும் என்பதுதான் 10 வயதிலிருந்து எனது கனவு’ என்று பூரிப்பும் சிலிர்ப்புமாகச் சொல்கிறார், ஷாவ்னா.

‘‘விவரம் தெரிந்த நாள் முதல், விண்வெளிதான் என் மனதைக் கொள்ளைகொண்ட விஷயம். பள்ளியில் நான் செய்யும் அறிவியல் சம்பந்தமான செயல்திட்டங்கள்கூட விண்வெளி சார்ந்ததாகவே இருக்கும். அது தொடர்பான புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்து என் அறிவை வளர்த்துக்கொண்டேன். ஒரு விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் என்பதே என் லட்சியம். எனது பெற்றோர் எங்களை வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று இரவில் திறந்தவெளியில் கூடாரம் அமைத்துத் தங்குகையில்கூட நான் வானையே பார்த்துக்கொண்டிருப்பேன். நகரத்தின் பிரகாச வெளிச்சத்தைத் தாண்டிய அந்த ஆழ்ந்த இருள் சூழலில், நான் வானில் பால்வீதி மண்டலத்தைத் தேடிப் பார்ப்பேன். சில கோடைகால இரவுகளில் எரிகல் மழையைப் பார்க்கும் அதிர்ஷ்டமும் கிட்டும். அப்போது அது ஒரு மாயாஜாலம் போல இருக்கும்’’ என்று தனது விண்வெளி காதலை விவரித்துக்கொண்டே போகிறார்.

புதிரும் சுவாரசியமும் நிறைந்த விண்வெளி, ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கலாம். ஆனால் விண்வெளி வீராங்கனை பணியும், அதற்குத் தயாராவதும் எளிதான விஷயங்களா? அதுபற்றி ஷாவ்னா என்ன சொல்கிறார்?

‘‘விண்வெளிக்குச் செல்லத் தயாராவது என்பது ஓய்வில்லாமல் உழைக்க வேண்டிய விஷயம். அதுவும் ஒரே நேரத்தில் மருத்துவம், விண்வெளி என இரண்டிலும் கவனம் செலுத்தும் எனக்கு ரொம்பவே கஷ்டம். உதாரணத்துக்கு தற்போது, விண்வெளியில் அவசரநிலையை சமாளிப்பது தொடர்பான பயிற்சியைப் பெற்று வருகிறேன். அதாவது, ஏதாவது அவசர சூழ்நிலை அல்லது தீப்பிடிப்பது போன்ற சந்தர்ப்பங்களில் விண்கலத்தை நீரில் இறக்குவது எப்படி என்று எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேநேரம், ஒரு பயிற்சி அறுவை சிகிச்சை நிபுணராக சில அறுவைசிகிச்சைகளிலும் நான் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அடுத்ததாக, செவ்வாய்க் கிரகம் செல்வது தொடர்பான ஒரு பாலை வனப் பயிற்சிக்கும் நான் தயாராகிக்கொண்டிருக் கிறேன்.

இவையெல்லாம் கேட்பதற்கு சுவாரசியமாகத் தெரியலாம். ஆனால் பல ‘ரிஸ்க்’குகளும் இருக்கின்றன. விண்வெளியில் சூழல் எப்போது எப்படி இருக்கும் என்று கூறவே முடியாது. நாம் விண்வெளிக்கு நன்றாகத் தயாராகி இருக்கலாம், நம்முடைய சிறந்த திறனை வெளிப்படுத்த துடிப்பாக இருக்கலாம். ஆனால் அடுத்து என்ன வரும் என்று கணிக்கவே முடியாது’’ -விளக்கிச் சொல்கிறார், ஷாவ்னா.

அவர், தங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் சில குறித்தும் சொன்னார்...

‘‘புவியீர்ப்புச் சூழல் குறைக்கப்பட்ட விமானங்களில் எங்களை அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பார்கள். ஆனால் அந்த விமானம், சாதாரண பயணிகள் விமானத்தைவிட அதிக உயரத்தில் பறக்காது. உதாரணமாக, பயணிகள் விமானம் 30 ஆயிரம் அடி முதல் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் என்றால், எங்கள் விமானம் 17 ஆயிரம் அடி உயரத்தில்தான் பறக்கும். ஆனால் அது பறக்கும் விதத்தில் நமக்குத் தடுமாற்றமும் வாந்தியும் ஏற்படக்கூடும். அதையெல்லாம் சமாளித்துப் பழக வேண்டும்.’’

இப்போதைக்கு இரண்டு குடிமக்கள் அறிவியல் விண்வெளித் திட்டப் பணிகளில் ஷாவ்னா ஈடுபட்டிருக்கிறார். உலக வெப்பமயமாதலுடன் தொடர்புடைய குறிப்பிட்ட வகை மேகங்கள் குறித்து ஆராய்வதும், புவியீர்ப்பற்ற சூழல், மனோவியல், உடலியல் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்வதும் அத்திட்டப் பணிகளின் அடிப்படை. அவற்றில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு ஷாவ்னா செயல்பட்டு வருகிறார்.

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்சுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் மூன்றாவது இந்தியப் பெண் என்பதில் தனக்குப் பெருமை என் கிறார், ஷாவ்னா. தனது சிறந்த திறமையை வெளிப் படுத்துவதும், ஒரு விண்வெளி வீராங்கனையாக வெற்றி பெறுவதுமே தனது நோக்கங்கள் என்றும் சொல்கிறார்.

‘‘நாம் நமது விருப்பங்களுக்கும் பொறுப்புகளுக்கும் அது அதற்கு உள்ள முக்கியத்துவத்தை அளித்துச் செயல்பட்டால், நம்மால் அருமையாகச் சாதிக்க முடியும்’’ என்று அடித்துச் சொல்கிறார், சாதனை மங்கை ஷாவ்னா பாண்ட்யா.