மாவட்ட செய்திகள்

குழந்தைகளை குறிவைக்கும் ‘அப்ளிகேஷன்கள்’ + "||" + Applications that target children

குழந்தைகளை குறிவைக்கும் ‘அப்ளிகேஷன்கள்’

குழந்தைகளை குறிவைக்கும் ‘அப்ளிகேஷன்கள்’
பிளே கிரவுண்ட் தெரியாது! ஆனால் பிளே ஸ்டோர் தெரியும்!! -இது தான் இன்றைய குழந்தைகளின் நிலை.
டிஜிட்டல் விளையாட்டுகளில் சிக்கிக் கிடக்கும் குழந்தைகளை குறிவைத்து தகவல் திருட்டுகள் நடக்கின்றன என்பது தான் இப்போதைய அதிர்ச்சித் தகவல்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் செலுத்தும் ஆதிக்கத்தைப் போல வேறெதுவும் செலுத்தவில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலான மக்களின் பொழுதுகள் குட்டிக்குட்டி வெளிச்சத் திரைகளில் அடங்கிவிடுகின்றன. அதிலும் சுட்டிக்குழந்தைகளின் நிலைமை படுமோசம். ஏனெனில் அவர்கள் வளர்க்கப்படுவதே, அப்ளி கேஷன்களின் உதவியுடன்தான். நிலாவை காண்பித்து சோறு ஊட்டிய காலம் மலையேறி, யூ-டியூப் வீடியோக்களை காட்டி சோறு ஊட்டும் நிலை உருவாகிவிட்டது. அதனால் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களிலும், அதிலிருக்கும் அப்ளிகேஷன்களிலும் ஸ்மார்டாக செயல்படுகிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.

ஆம்..! குழந்தைகள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள், யாருக்கும் தெரியாமல் அவர்களை கண் காணிக்கிறதாம். இந்த கண்காணிப்பு குழந்தை கடத்தல் வரை நீளலாம் என எச்சரிக்கிறார்கள், ஆய்வாளர்கள். இந்த அதிர்ச்சி தகவல்களுக்கு பிள்ளையார் சுழிப்போட்டவர்கள், அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள இன்டர்நேஷனல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள். இவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் தகவல்கள் திருடப்படுகிறது என்பதை நிரூபித்ததுடன், அதற்கு காரணம் பெற்றோர்கள்தான் என கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளனர்.

அமெரிக்காவில் ‘கோப்பா’ US Children’s Online Privacy Protection Act (Coppa) என்ற குழந்தைகள் தகவல் பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம், குழந்தைகளின் தகவல்களை பாதுகாப்பது தான். ஆனால் கோப்பா சட்டத்தை கண்டுகொள்ளாத பல அப்ளிகேஷன் நிறுவனங்கள், குழந்தைகளின் தகவல்களை திருடும் வகையில் பல ஆயிரம் அப்ளிகேஷன்களை உருவாக்கியிருக்கிறார்களாம். இதை கலிபோர்னியா ஆய்வாளர்கள் நிரூபித்ததுடன், ஒருசில கருத்துக்கணிப்புகளையும், ஆய்வு களையும் நடத்தியிருக்கிறார்கள். அவை அனைத்துமே குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை திடுக்கிட வைக்கிறது. அது என்ன தெரியுமா...? பெற்றோர்கள்தான் குழந்தைகளை இப்படிப்பட்ட சிக்கல்களில் சிக்கவைக்கிறார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறது.

எட்டு வயதுக்கும், பதிமூன்று வயதுக்கும் உட்பட்ட ஆறாயிரம் குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் 54 சதவீதம் குழந்தைகள், ‘பெற்றோர் தங்களைக் கவனிப்பதை விட அதிக நேரம் செல்போனே கதியென கிடப்பதாக’ கவலை தெரிவித்திருக்கிறார்கள். அதனால்தான் தாங்களும் செல்போனிற்கு அடிமையாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க... இருபத்து ஐந்து சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாய் இருப்பதாகவும், எப்படியாவது அவர்களை வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

எல்லாவற்றையும் விட கவலைக்குரிய விஷயம் இது தான். “ஸ்மார்ட் போனைத் தான் எங்கள் பெற்றோர் எங்களை விட அதிகமாக நேசிக்கிறார்கள்” என முப்பத்து இரண்டு சதவீத குழந்தைகள் கவலையுடன் தெரிவித்திருக்கின்றனர். இப்படி பெற்றோரும், குழந்தைகளும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு வைப்பதற்கு ஒரே காரணம் ஸ்மார்ட்போன்களும், அப்ளி கேஷன்களும்தான்.

சமூகவலைதளம், நவீன அப்ளிகேஷன்களால் குடும்ப உறவுகளை மறந்து, குழந்தைகளையும் ‘தகவல் திருட்டு’ என்னும் சிக்கலில் சிக்கவைத்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய குழந்தைகளை நாம் கவனிக்காவிட்டால் அவர்களை வேறு யாரோ கவனிப்பார்கள். அது அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பாகவும், அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘பத்து வயது குழந்தைக்கு சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது’ என்கிறது. இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லைஎனினும், பெற்றோரின் ஸ்மார்ட்போன்களை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம்! ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரியாக தினமும் சுமார் இரண்டரை மணி நேரம் போனில் விளையாடுகிறார்கள் என்றால் நம்புவீர்களா..? இந்த கருத்தை புள்ளிவிவரங்கள் நம்பவைக்கின்றன.

இந்த சூழலில் தான் கூகுள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பு விதி மீறல் அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது. கூகுள் ஆப் ஸ்டோரில் உள்ள குழந்தைகளுக்கான அப்ளிகேஷன்களை ஆய்வு செய்ததில் 57 சதவீதம் அப்ளிகேஷன்கள் பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கின்றன. அதாவது குழந்தைகளை மறைமுகமாக கண் காணிக்கின்றன.

குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள்?, எதை தேடுகிறார்கள்?, அவர்களுக்கு எது பிடிக்கிறது?, எங்கு இருக்கிறார்கள்? என்பதைக் கண்ணும் கருத்துமாக கவனிக்கின்றன. உதாரணத்திற்கு... ஒரு குழந்தை ரிமோட்டில் இயங்கும் மோட்டார் சைக்கிளை தேடினால், அதை கண்காணிப்பவர்கள், அதுசம்பந்தமான விளம்பரங்களையும், இணையதளங்களையுமே குழந்தைகளின் கண்களில் தென்படும்படி உலாவ விடுவார்கள். இது மோட்டார் சைக்கிளுடன் நின்றுவிட்டால் பரவாயில்லை. கொஞ்சம் வயதுக்கு மீறிய விஷயங்களையும், ஆபாசமான தகவல்களையும் உலாவ விட்டால் என்ன ஆவது...?.

ஒருசில அப்ளிகேஷன்கள் விளம்பரங்களுக்காக தகவல்களை திருடுகின்றன. ஒருசில ஆப்ஸ்கள் காண்டாக்ட் தகவல்களையும், குழந்தைகளின் விவரங்களையும் திருடுகின்றன. சில ஆப்ஸ் தனிநபர் தகவல்களை திருடி வேறு இடங்களுக்கு அனுப்பு கின்றன. இப்படியே தகவல் திருட்டு பட்டியல் நீள்கிறது. பெரியவர்களிடம் செய்யமுடியாத தகவல் திருட்டை, குழந்தைகளின் மூலம் செய்வதுதான் ஒருசில அப்ளிகேஷன் நிறுவனங்களின் நோக்கம். அதற்கு நாமும் துணைபோகிறோம் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. இத்தனைக்கும் பிரபலமான, சுமார் ஏழரை லட்சம் முறைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் குழந்தைகளுக்கான அப்ளிகேஷன்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய விஷயம்.

குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு, சிந்தனை திறன் வளர்த்தல் என வசீகரிக்கும் ஆப்களின் நிலை தான் இது என்பது கவலையளிக்கிறது. ஏற்கனவே கூகுள் நிறுவனமும், பேஸ்புக் நிறுவனமும் தனிநபர் தகவல்களை மிகப் பெரிய அளவில் சேகரிக்கிறது எனும் சர்வதேச சர்ச்சை அடிக்கடி உயிர்ப்புடன் துடிப்பது உண்டு. அந்தசமயங்களில் மட்டும் வாய்திறக்கும் கூகுள், அந்த சர்ச்சையை மூடி மறைக்க ஒருசில அப்ளிகேஷன்களை தடைசெய்வதும் உண்டு. மேலும் பாதுகாப்பு விதி முறைகளை மீறும் ஆப்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூகுள் நிறுவனம் உறுதியளிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இப்போதும் உறுதியளித்திருக்கிறது. குழந்தைகள், குடும்பங்கள் இவற்றின் பாதுகாப்பின் மீது எந்தவிதமான தளர்வுக்கும் இடமில்லை என அது தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்...!