அறிவுத்திறன் தேர்வில் அசத்திய மாணவர்!
லண்டனில் வசிக்கும் இந்திய மாணவர் அத்விக், அறிவுத்திறன் போட்டி ஒன்றில் அதிகபட்ச மதிப்பெண் பெற்று அசத்தியிருக்கிறார்.
தற்போது அளவிடப்பட்டிருக்கும் 11 வயது அத்விக்கின் அறிவுத்திறன் (ஐகியூ), அறிவியல் மாமேதைகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் ஆகியோருக்கு இணையானதாகக் கருதப்படுகிறது.
அப்படி மாபெரும் சாதனை புரிந்த மகிழ்ச்சி மாறாமல் இருந்த அத்விக்கின் பேட்டி...
‘‘எங்களின் பூர்வீகம் தமிழ்நாடு திருச்சி என்றாலும், நான் பிறந்தது, வேல்சில் உள்ள கார்மத்தன்ஷையரில். நாங்கள் கடந்த 2008-ம் ஆண்டு லண்டனுக்கு இடம்பெயர்ந்தோம்.
நான் லண்டன் கிரேஞ்ச் ஆரம்பப் பள்ளியில் ஆறாம் ஆண்டு படிக்கிறேன். எங்கப்பா பாலாஜி, இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் டாக்டராகப் பணிபுரிகிறார், அம்மா சங்கீதா ஒரு பயோகெமிஸ்ட்ரி லேப்பில் வேலைபார்க்கிறார். நான் படிக்கும் அதே பள்ளியில் என் தங்கை அஸ்மிதாவும் இரண்டாம் ஆண்டு பயில்கிறார்.
அறிவுத்திறன் சோதனை
‘மென்சா டெஸ்ட்’ என்பது உலகிலேயே மிகவும் பழமையான, மதிப்புமிக்க அறிவுத்திறன் (ஐகியூ) சோதனை அமைப்பாகும். இந்தச் சோதனையில் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். ஆனால் முன்னணி மதிப்பெண்களைப் பெறும் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே உறுப்பினர் தகுதி வழங்கப்படும்.
இதற்கான 2 மணி நேரத் தேர்வில் பங்கேற்ற நான், 162 மதிப்பெண்கள் பெற்றேன். 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இதுதான் அதிகபட்சமாக பெறக்கூடிய மதிப்பெண் ஆகும். வயது வந்தோர் பிரிவிலேயே அதிகபட்சமாக 161 மதிப்பெண்கள்தான் பெறப்பட்டிருக்கிறது.
நான் இந்தச் சாதனை மதிப்பெண்கள் பெற்றதன் மூலம், பெருமைக்குரிய மென்சா அமைப்பில் உறுப்பினராவதற்குத் தகுதி பெற்றிருக்கிறேன்.
விசேஷமாகத் தயாராகவில்லை
எனக்கு மென்சா தேர்வின் ‘கேட்டல் தேர்டு பி’ பிரிவு எளிதாக இருந்தது, ஆனால் ‘கேட்டல் கல்சுரல் பேர் டெஸ்ட்’ பிரிவு சற்றுக் கடினமாக இருந்தது. குறிப்பிடத்தக்க விஷயம், நான் இத்தேர்வுக்காக விசேஷமாகத் தயாராகவில்லை. எனக்கு எப்போதுமே ஆங்கிலம், அறிவியல், கணிதப் பாடங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. புதிர்கள், புதிர் விளையாட்டுகள் ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டு ஈடுபடுவேன். இப்படி இயல்பாக எனது அறிவைக் கூர்தீட்டிக்கொண்டே இருந்ததுதான் எனக்கு மென்சா தேர்வில் கைகொடுத்திருக்கிறது என்று எண்ணுகிறேன். எனது நண்பர்கள் சிலர், சும்மா இதில் பங்கேற்றுப் பார்ப்போம் என்று கூறியதால்தான் நான் இத்தேர்வில் பங்கேற்றேன்.
இன்ப அதிர்ச்சி
இப்படி விளையாட்டாக மென்சா தேர்வில் பங்கேற்ற எனக்கு, அதன் முடிவு வெளியானதும் இன்ப அதிர்ச்சி. இவ்வளவு மதிப்பெண்கள் பெறுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. நான் மிகவும் பெருமையாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்ந்தேன். இந்தச் சாதனை என் மீதே எனக்கு அதிக நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது, தெம்பைக் கொடுத்திருக்கிறது. இன்னும் எனது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற திடமான உறுதியை உண்டாக்கி யிருக்கிறது. எனது பேட்டி, பிபிசி வானொலியில் ஒலிபரப்பானதும், என்னைப் பற்றிய கட்டுரை உள்ளூர் செய்தித்தாளில் வெளியானதும் எனக்குத் தனி மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
படிப்பு... இனிப்பு
எனக்கு படிப்பு இயல்பாகவே இனிப்பான விஷயம் என்பதால், ஒருபோதும் கஷ்டப்பட்டதே இல்லை. வீட்டுப் பாடத்தைக் கூட கடகடவென்று முடித்துவிட்டு விளையாட ஓடிவிடுவேன். எப்போதுமே எங்கள் பள்ளியில் எனக்கு சிறப்பான ‘ரிப்போர்ட்’தான் கொடுப்பார்கள். பல்வேறு கணிதத் தேர்வுகளில் பங்கேற்று வென்று பரிசுகள் பெற்றிருக்கிறேன். நான் மேற்கொண்ட சயின்ஸ் புராஜெக்டுகளுக்காக சான்றிதழ்கள் பெற்றுள்ளேன். எனது கவிதை ஒன்றும் பிரசுரம் ஆகியிருக்கிறது.
நான் தற்போது பிரைமரி ஸ்கூலில் ஆறாம் ஆண்டு முடித்து, செகண்டரி ஸ்கூலில் சேர்வதற்காக 8 கிராம்மர் பள்ளிகளுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். அவை எல்லாமே எனக்கு அனுமதி அளித்திருக்கின்றன. அவற்றில் இருந்து ஒன்றை நான் தேர்வு செய்வேன்.
விளையாட்டிலும்...
எனக்கு படிப்பு தவிர மற்ற விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. கிடார், கீபோர்டு வாசிப்பேன். டிரினிட்டி இசைக் கல்லூரியில் இசைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.
விளையாட்டுகளில் எனக்கு ஓட்டப்பந்தயம், கால்பந்து, கிரிக்கெட் ஆகியவை பிடித்தமானவை. இங்கிலாந்தில் மண்டல அளவிலான 100 மீ., 60 மீ., ஓட்டப்பந்தயங்களில் வெற்றிபெற்று, பதக்கங்கள், கேடயங் களைக் கைப்பற்றியிருக்கிறேன். அதேபோல மண்டல அளவில் பல்வேறு நிலை நீச்சல் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறேன்.
பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட், கால்பந்து போட்டிகளில் ஆடி கவனம் பெற்றிருக்கிறேன்’’ என்று அடுக்கிக் கொண்டே போகிறார், அத்விக். பிரபல மான்செஸ்டர் யுனைடெட்தான் இவருக்குப் பிடித்தமான கால்பந்து அணியாம்.
பெருமித பெற்றோர்
‘‘அத்விக் எந்த நெருக்கடியும் இன்றி வெகு சாதாரணமாகத்தான் மென்சா தேர்வில் பங்கேற்றான். ஆனால் அவன் இவ்வளவு பெரிய சாதனை புரிந் திருப்பதில் எங்களுக்குப் பெருமை’’ என்கிறார், அத்விக்கின் தந்தை பாலாஜி.
அத்விக்கின் தாய் சங்கீதா கூறுகையில், ‘‘எனது சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அத்விக்குக்கு பெரிதாக சாதிக்கும் திறன் இருக்கிறது என்று தெரியும். ஆனால் அவன் எப்போதும் அடக்கமாக இருப்பான். அவனுக்கு நாங்கள் மட்டுமின்றி, எங்கள் நண்பர்கள், ஆசிரியர் வட்டாரமும் உறுதுணையாக இருந்தது’’ என்றார்.
அத்விக்கின் குட்டி சகோதரி அஸ்மிதாவும் தன் அண்ணனைப் பாராட்டியதுடன், அத்விக்கின் சாதனையை தான் பார்ப்பவரிடம் எல்லாம் கூறிக்கொண்டே இருக்கிறார்.
பிரிட்டீஷ் மென்சா அமைப்பின் தலைமைச் செயல் அலுவலர் ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் கூறும்போது, ‘‘அத்விக் பெற்றிருக்கிற வெகு சிறப்பான மதிப்பெண்களுக்கு எங்கள் பாராட்டுகள். நாங்கள் வழங்கும் உறுப்பினர் வாய்ப்பை அவர் ஏற்கவேண்டும். இதில் இணைவதன் மூலம், அவர் ஓர் அறிவுசார் சமூகத்தின் அங்கமாக முடியும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்’’ என்றார்.
மருத்துவமும் வானியலும்
அத்விக் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து, ‘‘நான் மருத்துவமும், எனது அபிமான விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் போல ஆஸ்ட்ரோபிசிக்ஸும் பயில விரும்புகிறேன். இரண்டையும் பயில்வது சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். காரணம், நான் பெரியவனாகும்போது மனிதர்கள் செவ்வாய்க் கிரகத்தில் வசிக்கத் தொடங்கியிருப்பார்கள். நான் செவ்வாய் சென்று, அங்குள்ள மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்கலாமே?’’ என்று சிரிக்கிறார்.
அத்விக்கின் லட்சியங்கள் விண்ணையும் தாண்டிச் செல்கின்றன!
Related Tags :
Next Story