சோழவந்தான் அருகே குவாரியை அகற்றக்கோரி மணல் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்


சோழவந்தான் அருகே குவாரியை அகற்றக்கோரி மணல் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 7:32 PM GMT)

சோழவந்தான் அருகே மணல் குவாரியை அகற்றக்கோரி, கிராம மக்கள் மணல் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே உள்ள தச்சம்பத்து கிராமத்தில் அரசியல் கட்சியினர், கிராம மக்கள் ஆகியோர் நேற்று காலை திடீரென என்று காலிகுடங்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் உட்பட போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியல் செய்தவர்கள் கூறியதாவது:- ஏற்கனவே வைகையாற்றுப் பகுதியில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தற்போது சோழவந்தானில் மணல் குவாரி ஏற்படுத்தி ஏராளமான லாரிகளில் மணல் அள்ளி செல்லப்படுகிறது. இதனால் சோழவந்தானை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மணல் குவாரியை உடனே அகற்ற வேண்டும், மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்து கூறி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மணல் லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர். அவர்கள் உடனடியாக மணல் குவாரியை மூட வேண்டும் என்று கோஷமிட்டனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் கிராம மக்களை சமாதானம் செய்து, மணல் ஏற்றி வந்த லாரியை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதேபோல சோழவந்தான் காமராஜர் சிலை முன்பாக கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்தனர். அவர்கள் அந்த வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். மேலும் சிறைபிடித்த மணல் லாரியை போலீசார் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

Next Story