தமிழகத்தில் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்


தமிழகத்தில் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 7:32 PM GMT)

தமிழகத்தில் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மேலூர்,

மேலூரில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. விழாவிற்கு மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வரவேற்று பேசினார். பொன்னுசாமி முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 990 பேருக்கு வேலை வாய்ப்பு உத்தரவுகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் இளைஞர்கள், மாணவர்களை தேடி சென்று வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்தாண்டு ஜெயலலிதா பேரவை சார்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பில் 3 ஆயிரத்து 300 பேருக்கு வேலை கிடைத்தது. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அவர்களை வேலையில் அமர்த்தினர்.

தமிழகத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை காட்டிலும் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தனி நபர் வருமானம் ஆண்டிற்கு ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் ஆகும். மற்ற மாநிலங்களில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் தான். ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பாக விளங்குகிறது. தற்போது கூட வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு அரசு உடனே பணம் மற்றும் பயண உதவி செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story