ஏழை குடும்பத்தினருக்கான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வில் குளறுபடி, பொதுமக்கள் புகார்


ஏழை குடும்பத்தினருக்கான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வில் குளறுபடி, பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 6 May 2018 3:15 AM IST (Updated: 6 May 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் ஏழை குடும்பத்தினருக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பாகனேரி ஊராட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மதகுபட்டி,

‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்துக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஏழை குடும்பத்தினருக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும். இதன்மூலம் பணம் செலுத்தாமலேயே நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தின்கீழ் 100 நோய்களுக்கு மேல் சிகிச்சை வழங்கப்படவுள்ளது. மேலும் தடுக்கக்கூடிய 70 நோய்களுக்கும், புற்றுநோய், இருதய நோய் போன்ற ஆபத்துமிக்க 30 நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இதற்கான பயனாளிகள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பற்றிய ஆவணங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இந்த காப்பீட்டு திட்டத்தில் சிவகங்கையை அடுத்த பாகனேரி ஊராட்சியில் பயனாளிகள் தேர்வில் பல்வேறு குளறுபடி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

பாகனேரியில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களுமே. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் இந்த ஊரில் உள்ள பயனாளிகள் பட்டியலில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து கடந்த 1-ந்தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எஸ்.வி.சி.சி. என்ற கணக்கெடுப்பின்படியே பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். இந்த கணக்கெடுப்பு எப்போது நடைபெற்றது, யாரால் நடத்தப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. பிரதமர் மோடியால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் பயன்பெறும்படி கொண்டு வந்த காப்பீட்டு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எனவே இத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து முறையாக மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story