பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் 31-ந் தேதிக்குள் வழங்கப்படும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்


பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் 31-ந் தேதிக்குள் வழங்கப்படும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்
x
தினத்தந்தி 6 May 2018 3:45 AM IST (Updated: 6 May 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கான இரு சக்கர வாகன மானியம் 31-ந் தேதிக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர்,

கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டு தினத்தினை முன்னிட்டு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் சிவகாசியில் வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குத்து விளக்கு ஏற்றி வைத்து 92 பெண்களுக்கு இருசக்கர வாகனம் உள்பட 147 பேருக்கு ரூ. 1 கோடியே 26 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில் அமைச்சர் பேசியதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனாக மாவட்டத்தில் சுமார் ரூ. 661 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ரூ.274.50 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 35 வயதுடைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் உழைக்கும் மகளிருக்கு 2,790 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,657 வாகனங்களுக்கான மானியம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,133 பெண்களுக்கான மானியம் 31-ந் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு முகாமில் 2,000-க்கும் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட 300 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story