தர்காவுக்கு செல்ல அனுமதி கேட்டு வன அலுவலகம் முற்றுகை
பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தர்காவுக்கு செல்ல அனுமதி கேட்டு வன அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானிசாகர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இங்குள்ள தெங்குமரஹடா செல்லும் வழியில் உள்ள கெஜிலட்டி மோயாற்றின் படித்துறையில் அடர்ந்த வனப்பகுதியில் கெஞ்ஜலே அர்ஷ் வலியுல்லா ஷாஹில் அன்பியா தர்கா உள்ளது. இது திப்புசுல்தான் காலத்தில் கட்டப்பட்ட பழமையான தர்கா ஆகும்.
இந்த தர்காவில் ஆண்டுதோறும் மே மாதம் பிறைக்கு அடுத்து வரும் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் சந்தனக்குட உரூஸ் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து முஸ்லிம்கள் 3 நாட்கள் வனப்பகுதியிலேயே தங்கியிருந்து வழிபட்டு செல்வார்கள்.
திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 3 மாநிலங்களில் இருந்து பவானிசாகர் வந்திருந்தார்கள். அவர்கள் வனத்துறையினரிடம், வனப்பகுதிக்குள் சென்று தாங்கள் தர்காவில் வழிபாடு நடத்த அனுமதி கேட்டார்கள். அதற்கு வனத்துறையினர், ‘அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. எனவே 3 நாட்களும் காலை 6 மணிக்கு சென்று மாலை 6 மணிக்குள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். வனப்பகுதியில் சமைக்கவோ, தீப்பற்ற வைக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, ஆடுகள், கோழிகள் பலியிடவோ கூடாது என்று வன அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடக்க வேண்டும்’ என்றார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று காலை பவானிசாகர் வன அலுவலகம் முன்பு திரண்டார்கள். பின்னர் வன அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரி பெர்னார்ட், பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள். தகவல் அறிந்து முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரமும் அங்கு சென்று முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையே தகவல் கிடைத்து கோபி ஆர்.டி.ஒ. கோவிந்தராஜ் அங்கு சென்று முஸ்லிம்களை வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி அளித்தார்கள். இதைத்தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு மாலை 6 மணி அளவில் வனப்பகுதிக்குள் சென்றார்கள்.
Related Tags :
Next Story