சண்முகாபுரத்தில் வடிசாராய ஆலை ஊழியர்- மனைவி மீது தாக்குதல், 4 பேர் கைது


சண்முகாபுரத்தில் வடிசாராய ஆலை ஊழியர்- மனைவி மீது தாக்குதல், 4 பேர் கைது
x
தினத்தந்தி 6 May 2018 3:30 AM IST (Updated: 6 May 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சண்முகாபுரத்தில் வடிசாராய ஆலை ஊழியர் - மனைவி மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்குளம்,

புதுச்சேரி சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரம் முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33). வில்லியனூரில் உள்ள வடிசாராய ஆலையில் தினக்கூலி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ராம்நகர் பகுதியை சேர்ந்த ஜெயபால் (20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் தனது மனைவி பிரபாவதி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார்.

அப்போது ஜெயபால் தனது நண்பர்களான வடக்கு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் (21), செந்தில்நாதன் (24), கோரிமேடு பிரகாஷ் (24) ஆகியோருடன் சக்திவேலின் வீட்டிற்கு சென்று அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பிரபாவதி வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்து அவர்களை தடுத்துள்ளார்.

அப்போது அவர்கள் அருகில் கிடந்த கல்லை எடுத்து பிரபாவதி மீது தாக்கியுள்ளனர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கு இருந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிவிட்டு கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த சக்திவேல், பிரபாவதி ஆகியோர் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இனியன், குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஜெயபால் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story