பாலியஸ்டர் நூல் விலை உயர்வால் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பாதிப்பு


பாலியஸ்டர் நூல் விலை உயர்வால் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 5 May 2018 9:30 PM GMT (Updated: 5 May 2018 8:21 PM GMT)

பாலியஸ்டர் நூல் விலை உயர்வால் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பின்னலாடை உற்பத்தியில் உள்ளாடை பிரிவில் மிக முக்கிய மூலப்பொருள் எலாஸ்டிக் ஆகும். இந்த எலாஸ்டிக் உற்பத்தியை 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் திருப்பூரில் செய்து வருகின்றன. இதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

எலாஸ்டிக் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக ரப்பர் மற்றும் செயற்கை நூலிழை (பாலியஸ்டர்) இருந்து வருகிறது. இதில் ரப்பர் கோடை காலத்தில் விலையேறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலமாக மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்து விலையேறாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம்.

ஆனால் மற்றொரு பெட்ரோலிய மூலப்பொருள் வகையை சார்ந்த பாலியஸ்டர், நைலான் நூல் பெட்ரோலிய பொருள் விலையேற்றத்தினால் கடந்த 2 மாதமாக கடுமையாக விலை உயர்ந்துள்ளது. இதுவரை சுமார் 20 சதவீதம் அதாவது கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது. எலாஸ்டிக் உற்பத்தியில் நூலின் பங்கு 60 சதவீதம் இருப்பதால் இந்த விலை உயர்வால் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறோம்.

மேலும், பின்னலாடை துறையினர் கடும் சிரமத்தை சந்தித்து வருவதால் எலாஸ்டிக் விலை உயர்வை அமல்படுத்த முடியாமல் தவித்து வருகிறோம். எனவே பின்னலாடை உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் எலாஸ்டிக் கொள்முதல் கடன் கால அளவையாவது குறைக்க வேண்டும். எலாஸ்டிக் தொழில் பாதிக்காமல் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்து பின்னலாடை துறையினரை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story