தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது


தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 9:12 PM GMT)

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது.

சூளகிரி,

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி நேற்று மாலை 5 மணியளவில் பெட்ரோல் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஓசூர் சூளகிரி அருகே செல்லும் போது, லாரியின் என்ஜின் வெப்பமாகி தீப்பிடித்தது. இதை பார்த்த லாரியின் டிரைவர் மற்றும் கிளனர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென்று பிடித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடி யாக சாலையின் இருபுறமும் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினார்கள். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கிருஷ்ணகிரி, ஓசூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதில் ஓசூரில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது லாரியில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனால் ஓசூர் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் காலியானது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் இருந்து வந்த தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியில் பிடித்திருந்த தீயை தீயணைப்பு படை வீரர்கள் அணைத்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது.

இந்த தீ விபத்து காரணமாக கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. தீயை அணைத்த பிறகு வாகனங்கள் இயக்கப்பட்டன. சூளகிரி போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு 8.30 மணி அளவில் சாலையின் இருபுறமும் போக்குவரத்து முற்றிலுமாக சீரானது. விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்க் ஒன்றும் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதின் காரணமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story