தாய் வீட்டுக்கு சென்ற மனைவி திரும்ப வராததால் வாலிபர் தற்கொலை


தாய் வீட்டுக்கு சென்ற மனைவி திரும்ப வராததால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 6 May 2018 4:00 AM IST (Updated: 6 May 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே தாய் வீட்டுக்கு சென்ற மனைவி திரும்ப வராததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே முளங்குழி நெல்வேலி கிழக்கு பகுதியை சேர்ந்த அம்புரோஸ் மகன் செந்தில் குமார் (வயது 30), தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 5 வயதில் ஒரு மகன் உண்டு.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில் குமாரை விட்டு அவரது மனைவி பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றார். அதன்பின்பு செந்தில்குமார் தனியாக வசித்து வந்தார். மேலும், அடிக்கடி மனைவியின் தாய் வீட்டுக்கு சென்று மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால், அவர் வர மறுத்து தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார். இதனால், கடந்த சில நாட்களாக செந்தில்குமார் மிகுந்த சோகத்தில் காணப்பட்டார்.

தற்கொலை

இந்தநிலையில், நேற்று முன்தினம் செந்தில்குமார் தனது வீட்டின் அருகே ஒரு கடையின் முன்பு விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story