பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு கலெக்டர் கணேஷ் முன்னிலையில் நடந்தது


பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு கலெக்டர் கணேஷ் முன்னிலையில் நடந்தது
x
தினத்தந்தி 6 May 2018 4:15 AM IST (Updated: 6 May 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் கணேஷ் முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அனைத்து பள்ளி வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆய்வு நேற்று புதுக்கோட்டை, இலுப்பூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் பள்ளி வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கலெக்டர் கணேஷ் முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், தீயணைப்புக்கருவி, முதலுதவிப்பெட்டி, டயர், சீட், கண்ணாடி, பிரேக், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து கலெக்டர் கணேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 52 பள்ளிகளை சேர்ந்த 326 பள்ளி வாகனங்களும், அறந்தாங்கி வட்டாரத்தில் உள்ள 38 பள்ளிகளை சேர்ந்த 178 பள்ளி வாகனங்களும், இலுப்பூர் வட்டாரத்தில் உள்ள 16 பள்ளிகளை சேர்ந்த 76 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 106 பள்ளிகளை சேர்ந்த 580 பள்ளி வாகனங்கள் நேற்று முதல் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதில் 14 பள்ளி வாகனங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சட்டரீதியான கடும் நடவடிக்கையினை உடனுக்குடன் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டு உள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி வாகனங்களை பள்ளி வாகனங்களாக இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அனைத்து பள்ளிகளிலும் இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய பள்ளி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அதிகாரி பாலசுப்பிரமணியம், மாவட்ட கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். 

Next Story