காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும் அமைச்சர் காமராஜ் உறுதி


காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும் அமைச்சர் காமராஜ் உறுதி
x
தினத்தந்தி 6 May 2018 4:15 AM IST (Updated: 6 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும் என திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு அனைத்து முன் ஏற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் ஆழித்தேர் அலங்கரிக்கும் பணிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு செய்தார். அப்போது தேர் அலங்கரிக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் கோவில் அதிகாரிகளுக்கு, அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் ஆழித்தேரோட்ட விழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார். பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆழித்தேரோட்ட விழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மருத்துவ வசதிகள், பஸ் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. வருகிற 27-ந் தேதி ஆழித்தேர் உள்ளிட்ட 5 தேர்களும் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்ட விழா நடக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான இறுதி வடிவம் வந்து விட்டது. சிறிது கால அவகாசம் கேட்கலாமே தவிர மத்திய அரசு தட்டி கழிக்க முடியாது. காவிரியை காவு கொடுத்தது கருணாநிதி ஆட்சியில் தான். சிறிது காலம் கடத்தப்பட்டாலும் கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். ரேஷன் கடைகளில் ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 92 ஆயிரம் டன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பொது வினியோக திட்டத்தில் அரிசி பற்றாக்குறை என்பதே கிடையாது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, உதவி கலெக்டர் (பொறுப்பு) மலர்கொடி, தாசில்தார் ராஜன்பாபு உள்பட பலர் இருந்தனர். 

Next Story