தலித்துகள் வீட்டில் உணவு சாப்பிடுவதால் தீண்டாமை ஒழியாது ராம்விலாஸ் பஸ்வான் சொல்கிறார்


தலித்துகள் வீட்டில் உணவு சாப்பிடுவதால் தீண்டாமை ஒழியாது ராம்விலாஸ் பஸ்வான் சொல்கிறார்
x
தினத்தந்தி 5 May 2018 11:36 PM GMT (Updated: 5 May 2018 11:36 PM GMT)

தலித்துகள் வீட்டில் உணவு சாப்பிடுவதால் மட்டும் தீண்டாமை ஒழிந்து விடாது என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

மும்பை,

லோக் ஜன சக்தி கட்சியின் தலைவரும், மத்திய நுகர்வோர் மற்றும் உணவுப்பொருட்கள் பொதுவினியோகத்துறை மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் மும்பையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒருவர் யார் வீட்டில் வேண்டுமானாலும் உணவு சாப்பிடலாம். ஆனால் அதனை அரசியலாக்கி பயன் பெறாதீர்கள். தலித்துகளை பரிதாபத்துக்குரியவர்களாக பார்ப்பது மிகவும் தவறானது. அரசியல் தலைவர்கள் தலித்துகள் வீட்டில் உணவு சாப்பிடுவதால் மட்டும் தீண்டாமை ஒழியாது.

பா.ஜனதா கட்சி தலித்துகள் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறது. பிரதமர் மோடியின் நோக்கம் மிகவும் சரியாக உள்ளது. ஆனால் சில தேவையற்ற சம்பவங்களால் பிரதமரின் செயல்கள் கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுகிறது.

தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த மத்திய அரசின் சீராய்வு மனுவில் சுப்ரீம் கோர்ட்டு சாதகமான தீர்ப்பு அளிக்கும் என தெரிகிறது. ஒருவேளை தீர்ப்பு எதிர்பார்ப்புக்கு மாறாக வர நேர்ந்தால் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து தலித் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story